இலங்கை அரசின் கொடிய குற்றங்கள் ‘வெள்ளைவேன் கதைகள்’ என்ற பெயரில் சினிமாவாக வெளியாகிறது
இலங்கையில் 'உச்சக்கட்ட போர்' என்ற பெயரில் அப்பாவி தமிழ் பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்து சர்வதேச போர் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட ராஜபக்சே அரசு, முள்ளிவாய்க்கால் முகாம் என்ற அடையாளத்துடன் ஆயிரக்கணக்கான தமிழர் குடும்பங்களை ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல் குறுகிய முள்வேலிகளுக்கு இடையில் அடைத்து வைத்து மனித உரிமைகளை மீறிய வகையில் அவர்களை சொல்லொண்ணா துன்பத்துக்கும், துயரத்துக்கும் உள்ளாக்கியது.
இங்கு தங்கியிருந்த கன்னிப்பெண்களின் கற்பினை சூறையாடிய சிங்கள ராணுவ வீரர்கள், இவர்களில் திடகாத்திரமான இருந்த தமிழ் இளைஞர்களையும் முகாமில் இருந்து வெளியேற்றி, வெள்ளை நிற ‘மர்ம வேன்க’ளில் ஏற்றிச் சென்றனர்.
ராணுவத்தின் ரகசிய விசாரணை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் சரிபாதி பேர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாயமாகி விட்டதாகவும் சில இலங்கை ஊடகங்களே கூட குற்றம் சாட்டுகின்றன. 'தங்களின் குலக்கொழுந்துகளை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்' என வயது முதிர்ந்த தமிழ்த் தாய்மார்கள் எழுப்பும் கூக்குரலுக்கும், வடிக்கும் சோகக் கண்ணீருக்கும் ராஜபக்சே மசியவில்லை.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உயர் ஆணையர் நவி பிள்ளை சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்த வேளையில் அந்த ஏழை தாய்மார்கள் வடித்த துயரக் கண்ணீரும், எழுப்பிய துயரக் கதறலையும் அன்றைய தொலைக்காட்சி செய்திகளில் பார்த்த உலகத் தமிழர்களில் பலர் தங்களின் பசி, தூக்கத்தை தொலைத்தனர்.
மனித நேயத்தையும், சர்வதேச மனித உரிமையையும் மதிக்காமல், காலில் போட்டு மிதிக்கும் ராஜபக்சேவின் தலைமையிலான இலங்கை அரசாங்கம், குற்றங்களில் எல்லாம் கொடிய குற்றமான உயிர்களைக் காணாமல் போகடிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வருகிறது.
இதனையடுத்து, பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் “காணாமல் போக்கடிக்கப்பட்ட” தங்களது உறவுகளை தேடிக்கொண்டும், அவர்களின் வருகைக்காக காத்திருந்தும் வருடக்கணக்கில் சோகத்தில் உழல்கின்றனர்.
இவ்வகையில், கடந்த 30 ஆண்டுகளில் காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், மனித உரிமை மீறல்களில், உலகளாவிய அளவில், முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஈராக் நாட்டுடன் இலங்கை போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
இன்றளவில் கூட, மாதத்தில் நான்கைந்து தமிழ் இளைஞர்கள் மாயமாகி போவதாக அங்குள்ள தமிழர்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், புத்தமதத்தின் அகிம்சை நெறியை கடைபிடித்து ஆட்சி நடத்துவதாக கூறிவரும் ராஜபக்சே அரசின் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களையும் அட்டூழியங்களயும் சர்வதேச சமுதாயத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டும் நோக்கத்தில் ‘வெள்ளைவேன் கதைகள்’ என்ற திரைப்படம் தயாராகி உள்ளது.
சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளைவேனில் கடத்தப்பட்டவர்கள், ஆயுதமேந்திய போராளிகளாக சாட்சியங்களோடு சரணடைந்தவர்கள், போராளி இயக்கங்களால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு புதிய போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளலாவிகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களின் கதைகளும் காரணங்களும், 'கொலைகார இலங்கை அரசுக்கு யாரும் தப்பவில்லை’ என்பதற்கான வெள்ளித்திரை சாட்சியமாக இந்த ‘வெள்ளை வேன் கதைகள்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இலங்கை ராணுவத்தின் கடுமையான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பயணம் செய்து, முஸ்லிம், சிங்களப் பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்திந்து, 'கொரில்லா படப்பிடிப்பு' நுட்பங்களுடன், உயிர் ஆபத்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வெள்ளை வேன் கதைகளை எழுதி, இயக்கி தயாரித்திருக்கிறார், லீனா மணிமேகலை என்ற தமிழ் பெண்.
90 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் கடந்த ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றபோது லண்டனின் சேனல் ஃபோர் தொலைக்காட்சியில் சிறப்பு ஒளிபரப்பாக வெளியானது.
அதனை தொடர்ந்து, லண்டனில் வெளியிடப்பட்ட ‘வெள்ளைவேன் கதைகள்’ படத்தை விரைவில் தமிழக தலைநகர் சென்னையிலும் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பதாக சமூக வலைத்தளங்களின் வாயிலாக தமிழ் ஆர்வலர்கள் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
No comments: