சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: என்ஜினீயரிங் மாணவர்– வாலிபர் விபத்தில் பலி
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் விடிய விடிய களைகட்டியது. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தமிழகம் முழுவதும் பண்டிகை போல கொண்டாடப்பட்டு வருகிறது. 2013–ம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2014–ம் ஆண்டை மக்கள் உற்சாத்துடன் வரவேற்றனர்.
மெரினாவில் எப்போதும் போல, புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு 10 மணியளவில் இருந்தே தொடங்கியது. நள்ளிரவில் 12 மணிக்கு இந்த கொண்டாட்டங்கள் உச்சக் கட்டத்தை எட்டியது. மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள், மின்னல் வேகத்தில் சென்றனர். இவர்களை கட்டுப்படுத்த போலீசார் படாத பாடு பட்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடந்த ஆண்டு வாலிபர் ஒருவர் பேசின் பிரிட்ஜ் பகுதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சுமார் ஒரு வாரத்துக்கு தொடர்ச்சியாக படுகொலைகள் நடந்தன.
இந்த ஆண்டு அது போன்று எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக்கூடாது என்று போலீசார் வேண்டிக் கொண்டிருந்தனர்.
அதற்கேற்றார் போல பெரிய அளவில் எந்தவித சம்பவங்களும் நடைபெற வில்லை. அதே நேரத்தில் என்ஜினீயரிங் மாணவரையும், வாலிபர் ஒருவரையும் புத்தாண்டு கொண்டாட்டம் காவு வாங்கி உள்ளது.
மேற்கு சைதாப்பேட்டை சுப்பிரமணிய சாலை பகுதியில் வசித்து வருபவர் பரஞ்ஜோதி. இவரது மகன் ராம்பிரசாத் (வயது 19). 2–ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவரான இவர் தனது நண்பர் ஒருவருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
கிண்டி காந்தி மண்டபம் எதிரே 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியதில், ராம்பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பின்னால் அமர்ந்திருந்த ராம்பிராசத்தின் நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் பெரியார் நகரை சேர்ந்த அருண் குமார் (17) நேற்று இரவு புத்தாண்டு கொண்டாடத்திற்கு கேக் வாங்குவதற்காக மோட்டாடர் சைக்கிளில் நண்பர்கள் 2 பேரை ஏற்றி கொண்டு குன்றத்தூருக்கு சென்றார். அங்கு தனியார் கல்லூரி அருகில் வைத்து அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அருண்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நண்பர்கள் 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இவர்கள் மீது மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. அதனை போலீசார் தேடி வருகிறார்கள்.
மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடத்துக்காக பல்லாயிரக் கணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது குதிரைப் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நேரத்தில், கூட்டத்தை பார்த்து 2 குதிரைகள் மிரண்டு ஓடின. தறிகெட்டு ஓடிய குதிரைகளின் மீது அமர்ந்திருந்த பெண் போலீஸ் ஒருவரும் போலீஸ்காரரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் சத்தம் போட்டுக் கொண்டும் அருவறுக்கத்தக்க வார்த்தைகளை அள்ளி வீசியபடியும் போன வாலிபர்கள் பலர் அத்து மீறி நடந்து கொண்டனர்.
புத்தாண்டு கொண்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், தனது கணவருடன் சென்று கொண்டிருந்த போது 4 மாணவர்கள் அவரை கிண்டல் செய்தனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அவர்களை கைது செய்தனர். குரோம் பேட்டையில் போதை வாலிபர்கள் சிலர் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தனர். எண்ணூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கேளிக்கை விடுதி ஒன்றில் அறிவித்தபடி உணவு வகைகளை வழங்க வில்லை என்று கூறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொடுங்கையூர் அன்பு நகரில் நேற்று இரவு புத்தாண்டையயொட்டி கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்களை பார்த்து மோட்டாடர் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் அசிங்கமான வார்த்தைகளை பேசி விட்டுச் சென்றனர். அதே பகுதியில் பொதுமக்கள் சிலர் திரண்டு 2013 உருவ மொம்மையை எரித்தனர். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி கீழே விழுந்து 20 வாலிபர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் 9 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் 8 பேர் ஸ்டான்லி மருத்துவ மனையிலும், 3 பேர் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.
No comments: