வீரம்' படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையா?: டைரக்டர் சிவா பேட்டி
அஜீத்குமார் நடித்த 'வீரம்’ படத்தில், தமன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையா?" என்ற கேள்விக்கு டைரக்டர் சிவா பதில் அளித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த 'எங்க வீட்டுப் பிள்ளை,' 'நம்நாடு,' சிவாஜிகணேசன் நடித்த 'வாணி ராணி' ஆகிய படங்களை தயாரித்த நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள புதிய படம், 'வீரம்.'
இந்த படத்தில், அஜீத்குமார் 4 தம்பிகளுக்கு அண்ணனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். 'சிறுத்தை' படத்தை இயக்கிய சிவா டைரக்டு செய்து இருக்கிறார். படத்தை பற்றி இவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு டைரக்டர் சிவா அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- 'வீரம்' படம், ரஜினிகாந்த் நடித்த 'முரட்டுக்காளை' படத்தின் பாதிப்பா?
பதில்:- நிச்சயமாக எந்த படத்தின் பாதிப்பும் இல்லை. அண்ணன்-தம்பிகளின் கதை என்பதால், அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த படத்தின் சாயலும் இதில் இருக்காது.
கேள்வி:- 'வீரம்' படம் ஒரு மலையாள படத்தை தழுவிய கதை என்கிறார்களே?
பதில்:- அது தவறான தகவல். 'வீரம்,' நேரடி தமிழ் படம்.
கேள்வி:- அஜீத்குமாருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்:- அது, ஒரு சந்தோஷமான அனுபவம். அஜீத் துணிச்சல் மிகுந்தவர் என்பது நிறைய பேருக்கு தெரியும். இந்த படத்தில் இடம்பெறும் பயங்கரமான ஒரு ரெயில் சண்டை காட்சியில், 'டூப்' நடிகரை பயன்படுத்தலாம் என்று நானும், ஸ்டண்ட் மாஸ்டரும் சொன்னோம். அஜீத் ஏற்கவில்லை. "அவருக்கு நடப்பது எனக்கு நடக்கட்டும்" என்று துணிச்சலுடன் அந்த காட்சியில் நடித்தார்.
கேள்வி:- தமன்னாவுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்களே?
பதில்:- இதுவரை தமன்னா நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு, 'வீரம்' படத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை தமன்னாவே என்னிடம் தெரிவித்தார். "இந்த படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
கேள்வி:- படத்தின் நீளம் எவ்வளவு?
பதில்:- 2 மணி நேரமும், 35 நிமிடங்களும் படம் ஓடும்.
இவ்வாறு டைரக்டர் சிவா பதில் அளித்தார்.
பேட்டியின்போது பட அதிபர் வெங்கட்ராம ரெட்டி, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் காசி விஸ்வநாதன், ஆர்ட் டைரக்டர் மிலன், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆகியோர் உடன் இருந்தார்கள்
No comments: