Header Ads

பாலா, ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா, கௌதம் மேனன்னு பிரபல இயக்குநர்களோட முதல் படத்துக்கான இன்ஸ்பிரேஷனே, அவங்க குருநாதர்களோட படமாத்தான் இருக்கு. எப்புடின்னு கேட்கிறீங்களா? படிங்க பாஸ்!

தாவது ஹாலிவுட் படத்தையோ, கொரியன் படத்தையோ, 'அப்படியே சாப்பிடலாம்’னு ஹார்லிக்ஸ் மாதிரி சுட்டுப் படம் எடுத்துட்டு, அப்புறம் இணையத்தில் யாராவது நோண்டி நொங்கெடுத்தா, 'காப்பி இல்லை, இன்ஸ்பிரேஷன்’னு சமாளிஃபிகேஷன்ஸ் தட்றது நம்ம இயக்குநர்களுக்கு வழக்கம்தான். ஆனா சில பிரபல இயக்குநர்களோட முதல் படத்துக்கான இன்ஸ்பிரேஷனே, அவங்க குருநாதர்களோட படமாத்தான் இருக்கு. எப்புடின்னு கேட்கிறீங்களா? படிங்க பாஸ்!
ஷங்கர்: ஷங்கரின் முதல் படம் 'ஜென்டில்மேன்’. அர்ஜுன் பகல்ல அப்பளக் கம்பெனி நடத்துற சாதுவா இருப்பார், ஆனா இன்னொரு பக்கம், திருடனா பெரிய அமௌன்ட் கொள்ளை அடிச்சு அந்தப் பணத்துல ஏழைகளுக்கு காலேஜ் கட்டுவார். ஷங்கரோட குருநாதர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய 'நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நம்ம சூப்பர்ஸ்டார் பகல்ல தமிழ் புரொஃபசரா காலேஜ்ல பாடம் நடத்திட்டு, நைட்ல ரௌடிகளை, சமூக விரோதிகளைக் களை எடுப்பார். இதைத்தான் ஷங்கர் அவரோட முதல் படத்துல உபயோகப்படுத்திட்டார். இதே இன்ஸ்பிரேஷனை ஷங்கர் 'இந்தியன்’ மற்றும் 'அந்நியன்’ படத்திலேயும் உபயோகப்படுத்தினார் என்பது எக்ஸ்ட்ரா இன்ஃபர்மேஷன்.
பாலா: டைரக்டர் பாலாவோட முதல்படம் 'சேது’. இந்தப் படத்துல அபிதாவை லவ் பண்ணவைக்க விக்ரம் கடத்திட்டுப் போய் மிரட்டுவார்.  அபிதாவுக்கு விக்ரம் மீது லவ் வரும்போது, வில்லன்கள் அடிச்சதுல விக்ரம் மனநலம் பாதிக்கப்பட்டு ஆசிரமம் போயிடுவார். அங்கே குணமாகி, அபிதாவைப் பார்க்கத் தப்பிச்சு வரும்போது அபிதா இறந்திருப்பாங்க. அதைப் பார்த்துட்டு திரும்பவும் வாழ்க்கையில் ஒரு வெறுமையோட நடந்துபோவார். பாலாவோட குருநாதர் பாலு மகேந்திரா இயக்கிய 'மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவி மனநலம் பாதிக்கப்பட்டவங்களா நடிச்சிருப்பாங்க. அந்தப் படத்தோட கிளைமாக்ஸ்ல ஸ்ரீதேவி கிட்ட தன்னை யாருன்னு காட்டிக்க முயற்சி பண்ணிக் கடைசியில அவங்க அடையாளம் தெரியாமப் போறதைப் பார்த்துட்டு கமல் மனசொடிஞ்சு அழுதுட்டே நிப்பார். இதைத்தான் பாலா அவரோட முதல் படத்தில் கொஞ்சம் மாத்தி அடிச்சுட்டார்.
எஸ்.ஜே.சூர்யா: இவரோட முதல் படம் 'வாலி’. இந்தப் படத்தில் தன் தம்பியின் மனைவியை அடைய நினைச்சு, தம்பியையே கொல்ல முயற்சி செய்வார் வில்லன் அஜித். இவரோட குருநாதர் வசந்த் இயக்கிய 'ஆசை’ படத்தில் மனைவியின் தங்கையை அடைய மனைவியையே கொலை செய்வார் பிரகாஷ்ராஜ். 'ஆசை’ வில்லன் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம்தான், 'வாலி’ வில்லன் அஜித் பாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன்.
கௌதம் வாசுதேவ் மேனன்: இவரோட முதல் படம் 'மின்னலே’. இந்தப் படத்தில் அப்பாஸுக்கு நிச்சயமான ரீமாசென், நம்ம மாதவன் நடத்தும் பெயர், ஆள் மாறாட்டத்தினால் மாதவனை லவ் பண்ணி, பின்னாடி உண்மை தெரிஞ்சு, அவரைத் தவிர்த்துட்டு,  கடைசியில் அதே மாதவனோடு சேர்வாங்க. இது ஒரு முக்கோணக் காதல் கதை. இவரோட குருநாதர் ராஜீவ் மேனன் இயக்கிய 'மின்சார கனவு’ படமும் முக்கோணக் காதல் கதைதான். அதில் கன்னியாஸ்திரியா ஆக நினைக்கிற கஜோலை அரவிந்த்சாமி லவ் பண்ணுவார். அதைச் சொல்ல பிரபுதேவாவைத் தூது அனுப்புவார். ஆனா கஜோல், பிரபுதேவாவை லவ் பண்ணுவாங்க. கடைசியில் உண்மை தெரிஞ்சு அரவிந்த்சாமி பாதிரியார் ஆகிடுவார். கஜோலும் பிரபுதேவாவும் சேர்ந்திடுவாங்க. இதைத்தான் கௌதம் மேனன் அவரோட முதல் படத்தில் காப்பியடிச்சுட்டார்.
சரவணன்: இவரோட முதல் படம் 'எங்கேயும் எப்போதும்’. இந்தப் படத்தில் திடீர்னு சந்திக்கிற அனன்யாவுக்கு ஷர்வானந்த் மேலே லவ் வந்துடும். ஆனாலும் அதுக்கப்புறமா அவரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்காம, அவர் பேர் கூட தெரியாம இவங்களாவே ஒரு பேரைக் கற்பனை செஞ்சு வெச்சுக்கிட்டு காதலோட இருப்பாங்க. ஷர்வானந்தும் அனன்யா பேர் மட்டுமே தெரிஞ்சுவெச்சுக்கிட்டு அவங்களைத் தேடி திருச்சிக்குப் போவார். இவங்க லவ்ல ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். சரவணனோட குருநாதர் இயக்கிய 'கஜினி’ படத்தில் சூர்யா ஒரு பெரிய கம்பெனி ஓனர். சூர்யாவுக்குப் பார்த்தவுடனே அசின் மேலே லவ் வந்துடும். ஆனா அசின், சூர்யாவை ஒரு ஏழைன்னு நினைச்சுக்கிட்டுப் பழகுவாங்க. ஒரு கட்டத்துல தான் ஒரு பணக்காரன் அப்படிங்கிற உண்மையைச் சொல்லலாம்னு  அசின் வீட்டுக்கு சூர்யா போகும்போது அங்க வில்லன் குரூப் அசினைக் கொன்னு சூர்யாவையும் தாக்கிடுவாங்க. அதனால சூர்யா யார்னு தெரிஞ்சுக்காமலேயே அசின் இறந்துடுவாங்க. இந்த 'சஸ்பென்ஸ்’ லவ்வைத்தான் சரவணன் அவரோட முதல் படத்துல உபயோகப்படுத்தினாரோ?

No comments:

Powered by Blogger.