ஜில்லா’வை மிஞ்சிய ‘வீரம்’ வசூல் : என்ன காரணம்..? (லேட்டஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்)
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 5 நட்களாக ஹவுஸ்புல் காட்சிகள் போர்டை தொங்க விட்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே அதாவது 10-ஆம் தேதியே அஜித்தின் வீரமும், விஜய்யின் ‘ஜில்லா’வும் ரிலீசாகி விட்டன.
இரண்டு படங்களுமே மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்பதால் ரசிகர்களும் அந்தப் படங்களை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இதனால் இரண்டு படங்களையும் வாங்கிய வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இருந்தாலும் முதல் நாளில் 8 கோடியை நெருங்கிய ஜில்லாவின் வசூல் இரண்டாம் நாளிலிருந்து குறைய ஆரம்பித்திருக்கிறது. தியேட்டர் தரப்பிலிருந்து வரும் தகவல்களும் ‘வீரம்’ படத்தை கம்பேர் செய்யும் போது ‘ஜில்லா’வின் வசூல் குறைவு தான் என்கிறது
உண்மை நிலவரம் என்ன என்பதை அறிந்து கொள்ள நாம் தமிழ்நாட்டு தியேட்டர் வசூல் குறித்து விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் ‘தமிழ்நாடு எண்டர்டெயின்மெண்ட்’ மாத இதழின் ஆசிரியரும், திரைப்பட விமர்சகருமான ராமானுஜத்திடம் கேட்டோம்.
“‘ஜில்லா’ படத்தை கம்பேர் செய்யும் போது ‘வீரம்’ படத்தின் வசூல் சிறப்பாக உள்ளது என்பது உண்மை தான். அதற்கு பல காரணங்கள் உள்ளது. குறிப்பாக ‘ஜில்லா’வை விட ‘வீரம்’ படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைத்துள்ளது. ‘ஜில்லா’ படத்துக்கு தமிழ்நாட்டில் சுமார் 420 தியேட்டர்கள் தான் கிடைத்தன. ஆனால் ‘வீரம்’ படத்துக்கு சுமார் 472 தியேட்டர்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன.
இரண்டு படங்களுமே 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்று வைத்துக் கொண்டால் அதில் 30 முதல் 35 சதவீத வசூலைத்தான் இரண்டு படங்களும் பெற்றுள்ளன. இதில் தான் ‘ஜில்லா’வை விட ‘வீரம்’ வசூலில் முந்தி விட்டது.
அதற்கு ‘ஜில்லா’ படத்தின் நீளமும் ஒரு காரணம் தான். ஒரு சாதாரண ரசிகர் 2 மணி நேரம் தியேட்டர்ல உட்கார்ந்து படம் பார்க்கிறதே பெரிய விஷயம். இந்த மாதிரி டைம்ல ஜில்லா படம் 3 மணி நேரம் இருந்தா எப்படி அவன் தியேட்டருக்குள்ள வந்து பார்ப்பான்..?
தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி எப்போதுமே இவ்வளவு நீளம் கொண்ட படத்தை தயாரிச்சது கெடையாது. அவர் அதிகபட்சமா ஆனந்தம் படத்தை ரெண்டே முக்கால் மணி நேரம் எடுத்தார். மீதி அவர் எடுத்த எல்லா படங்களின் நீளமும் ரெண்டேகால் மணி நேரம் தான். அப்படிப்பட்ட தயாரிப்பாளர் ‘ஜில்லா’ படத்தை மூணு மணி நேரம் எடுத்தது ஆச்சரியம் தான்.
அதுவுமில்லாம ‘ஜில்லா’ படத்தோட வசூல் குறையிறதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் அந்தப்படம் ரிலீசான முதல்நாளே படம் வேஸ்ட்டுன்னு ரசிகர்கள் மத்தியில மவுத்-டாக் பரவிடுச்சு. அதனாலேயும் அதோட வசூல் குறைஞ்சுப் போச்சு. அதுபோக ‘ஜில்லா’வை விட வீரம் நல்லாருக்குன்னு எல்லோரும் சொல்ல ஆரம்பிச்சதால அந்தப் படத்துக்கு கூட்டம் அதிகரிக்க ஆரம்பிச்சுடுச்சு.
ஏன்னா அந்தப் படத்துல அஜித்துக்கு ஓவர் பில்டப் கொடுக்காம அவருக்கு என்ன வருமோ? அதை மட்டும் படத்துல காட்டியிருந்தார் டைரக்டர் சிவா. அதுதான் அந்தப்படத்தோட பிளஸ்பாயிண்ட். ஆனா ஜில்லாவுல விஜய்க்கு எதெல்லாம் செட் ஆகாதோ அதையெல்லாம் படத்துல காட்டியிருந்தார் டைரக்டர் நேசன். அதுதான் அந்தப்படத்தோட மைனஸ் பாயிண்ட்.
ஆனாலும் ஜில்லா படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகமாத்தான் வர்றாங்க. வீரத்துக்கு இன்னும் வர ஆரம்பிக்கல, பசங்க தான் அதிகமா வர்றாங்க. ஃபேமிலி ஆடியன்ஸும் வர ஆம்பிச்சாங்கன்னா ‘வீரம்’ வசூல் இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கு” என்றார் ராமானுஜம்.
மொத்தத்தில் அஜித் படமா? அல்லது விஜய் படமா? என்ற கேள்வி இல்லாமல் இரண்டு படங்களுமே சரிசமமாக வசூலை வாரிக்குவித்து தமிழ்சினிமாவில் ஆரோக்கியமான போக்கை தொடர வேண்டும் என்பதே நம்முடைய ஆசை.
வீரம் – ஜில்லா வசூல் நிலவரம் :
1 ஆம் நாள் : ஜில்லா – 5.25 கோடி, வீரம் – 5.5 கோடி
2 ஆம் நாள் : ஜில்லா – 5 கோடி , வீரம் – 8 கோடி
3 ஆம் நாள் : ஜில்லா – 4.2 கோடி, வீரம் – 7.2 கோடி
4 ஆம் நாள் : ஜில்லா – 4 கோடி, வீரம் – 5.1 கோடி
5 ஆம் நாள் : ஜில்லா – 3.2 கோடி, வீரம் – 4.1 கோடி
No comments: