என் படத்தின் போஸ்டரை விமர்சிப்பதா?- சமந்தாவுக்கு மகேஷ்பாபு கண்டனம்
மகேஷ்பாபு நடித்த நேனொக்கடய்னே தெலுங்கு படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஐதராபாத் நகரமெங்கும் ஒட்டப்பட்டு இருந்தன. கடற்கரையில் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் அவர் பின்னால் கதாநாயகி கை, கால்களை தரையில் ஊன்றி நாய் போல் மண்டியிட்டு செல்வது போன்றும் அந்த போஸ்டர் இருந்தது.
இதற்கு சமந்தா கண்டனம் தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்துவது போல் இந்த போஸ்டர் உள்ளது என்று கருத்து வெளியிட்டார். இதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் ஆத்திரமுற்றனர். சமந்தாவின் கால்களை நாயகன் பிடிப்பது போன்ற அவரது பழைய பட போஸ்டர்களை வெளியிட்டு கண்டித்தனர். சமந்தாவை தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க கூடாது என்றும் எதிர்த்தனர். பிறகு இப்பிரச்சினை அடங்கியது.
ஆனால் மகேஷ்பாபு தற்போது திடீரென்று சமந்தாவை கண்டித்துள்ளார். நேனொக்கடய்னே படம் எதிர்பார்த்த படி நன்றாக ஓடவில்லை. இதற்கு சமந்தாவின் விமர்சனம் தான் காரணம் என அவர் நம்புகிறார். சமந்தா கருத்தால் படத்துக்கு பெண்கள் கூட்டம் குறைந்து விட்டதாகவும் கருதுகிறார்.
மகேஷ்பாபு கூறும் போது சமந்தாவுக்கு என்னையும் எனது மனைவியையும் நன்றாக தெரியும். பட போஸ்டரில் அவருக்கு மன உறுத்தல் ஏற்பட்டு இருந்தால் என்னிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம். மாறாக இன்டர்நெட்டில் கருத்தை வெளியிட்டு இருக்க வேண்டாம். இப்படி அவர் செய்து இருக்கவே கூடாது என்று தெரிவித்து உள்ளார். இதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் மீண்டும் சமந்தாவை எதிர்க்க தயாராகிறார்கள்.
No comments: