கொல்கத்தாவில் கற்பழிக்கப்பட்ட பெண் தீக்குளித்து சாவு: நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உடல் தகனம்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த அக்டோபர் மாதம், 16 வயது பெண்ணை, ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழித்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட வாலிபர்களை கைது செய்தனர். இந்நிலையில் காமக்கொடூரர்களின் பிடியில் சிக்கி, பட்ட வேதனைகளால் மனமுடைந்த அந்த இளம்பெண், கடந்த மாதம் 23-ம்தேதி உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்து தீக்குளித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்துவிட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தில் உள்ள அவரது தந்தையோ, சடலத்துடன் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தியபிறகே உடலை தகனம் செய்ய விரும்பினார்.
அவருடன் இணைந்து அத்துடன் தொழிற்சங்க உறுப்பினர்கள் நேற்று இரவு தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரவு முழுவதும் போலீசாருடன் நடந்த கடும் வாக்குவாதத்தையடுத்து காலையில் சடலம் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதன்பின்னர் 8 மணியளவில் தங்கள் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல சி.ஐ.டி.யு. உறுப்பினர்கள் ஆயத்தமானார்கள். அவர்களை போலீசார் தடுத்தனர். 2 மணி நேரத்திற்குப் பிறகு உடலை எடுத்துச் செல்ல அனுமதி அளித்தனர். அங்கு சென்றபின்னர் போராட்டம் நடத்த முதலில் திட்டமிட்டனர். அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் உடல் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக கவர்னரை சந்தித்த பெண்ணின் தந்தை, காவல்துறைக்கு எதிராக புகார் அளித்தார். மருத்துவ கவனக்குறைவு தொடர்பாக மருத்துவமனையின் சூப்பிரெண்ட் மீதும் புகார் அளித்தார். மேலும், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெற்றோர் வலியுறுத்தினர்.
No comments: