Header Ads

நான் சுயநலத்துக்காக கிரிக்கெட் ஆடவில்லை: காம்பீர் சொல்கிறார்

இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரர் காம்பீர். மோசமான ஆட்டம் காரணமாக அணியில் இருந்து கழற்றிவிடப் பட்ட அவர் மீண்டும் இடம்பெற கடுமையாக பேராடி வருகிறார்.

காம்பீர் சர்வதேச போட்டிகளில் விளையாடி ஒரு ஆண்டு ஆகிறது. 2012–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் அணியில் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரோடு ஒருநாள் போட்டியில் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.

ரஞ்சி டிராபி சீசனில் 578 ரன்கள் குவித்தார். அரியானா அணிக்கு எதிராக 153 ரன்கள் குவித்தார். இந்த ஆட்டத்துக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. அதில் இடம் பெறவில்லை. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

காம்பீர் அணியில் மீண்டும் சேர்க்கப்படாததற்கு அவரது சுயநலமான ஆட்டம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

நான் சுயநலத்துக்காக கிரிக்கெட் ஆடவில்லை. சமநிலையிலான ஆடுகளத்தில் நான் 800 முதல் 900 ரன்கள் வரை குவித்து உள்ளேன். டெல்லி அணி தோல்விக்காக என் மீது குற்றம் சாட்டுவது சரியில்லை. நான் எப்போதுமே அணியின் நலனுக்காக ஆடுவதில்தான் முக்கிய பங்கு வகித்து வருகிறேன். சுயநலத்துக்காக ஆடுவது கிடையாது.

கடுமையாக போராடி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணியில் நான் இடம் பெற்று இருந்தேன். என்னால் மீண்டும் அணியில் நுழைய முடியும். 54 டெஸ்ட் வரை ஆடி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

32 வயதான காம்பீர் 54 டெஸ்டில் 9 சதத்துடன் 4021 ரன்னும், 147 ஒருநாள் போட்டியில் 11 செஞ்சூரியுடன் 5238 ரன்னும் எடுத்துள்ளார்.

No comments:

Powered by Blogger.