கள்ளக்காதல் தகராறில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் சுனந்தா மரணம்: சசிதரூரிடம் போலீஸ் விசாரணை
மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. சபையில் இந்திய பிரதிநிதியாக பணிபுரிந்த சசிதரூர் அரசியலுக்கு திரும்பியது முதல் சர்ச்சையில் சிக்கி வந்தார். அரசியலில் நுழைந்த உடனேயே மத்திய மந்திரியானார்.
2 மனைவிகளை விவாகரத்து செய்த அவர் தனது 57–வது வயதில் 42 வயது பெண்ணான சுனந்தாவை 3–வது திருமணம் செய்தார்.
அடுத்த கொச்சி ஐ.பி.எல். அணியின் பினாமியாக செயல்பட்டதாக குற்றச் சாட்டுக்கு ஆளானார். இதனால் ஒரே வருடத்தில் மந்திரி பதவியை இழந்தார். அதன்பிறகு 2012–ல் மீண்டும் மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
இதுபோன்ற தொடர் சர்ச்சைகளுக்கு இடையேயான சமீபத்தில் அவரது கள்ளக்காதல் விவகாரம் வெடித்தது.
‘‘பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெகர் எனது கணவரை பின் தொடர்கிறார். அவர் ஐ.எஸ்.ஐ. உளவாளி. உங்களை விட்டு நான் பிரிந்து போக வைத்து விடாதீர்கள் சசி’’ என்று சுனந்தா கூறியிருந்தார்.
இதுபற்றி பத்திரிகைகள், ஊடகங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு டெல்லி ஓட்டலில் சுனந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சசிதரூருக்கு டெல்லியில் அரசு ஒதுக்கிய வீட்டில் வெள்ளையடிக்கும் பணி நடப்பதால் இருவரும் சாணக்கியா புரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 16–ந்தேதி முதல் தங்கி இருந்தனர். சுனந்தா தங்கி இருந்த அறைக்கு பக்கத்து அறையில் சசிதரூர் தனியாக தங்கி இருந்தார்.
சசிதரூர் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இரவு 7 மணிக்கு ஓட்டலுக்கு திரும்பிய போதுதான் சுனந்தா இறந்து கிடந்தார். சுனந்தா உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தாரா? அல்லது எப்படி இறந்தார் என்பன போன்ற கேள்விகள் எழுந்தன. எய்ம்ஸ் மருத்துவ மனையின் டாக்டர்கள் குழு சுனந்தாவின் உடலை முழுமையாக ஆய்வு செய்தனர்.
காலையில் தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்தது. அவரது குடல் உள்ளிட்ட முக்கியமான உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவரது மரணம் குறித்து தடயவியல் துறை டாக்டர் சுதீர் குப்தா நிருபர்களிடம் கூறுகையில் ‘‘சுனந்தா மரணம் இயற்கையானது அல்ல. அவரது உடலில் காயங்கள் உள்ளன. ஆனால் அந்த காயங்களால் மரணம் ஏற்படுத்த முடியாது. அவரது உடலில் இருந்து சில மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம்’’ என்றார்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை நடத்திய மற்றொரு டாக்டர் கூறுகையில், சுனந்தா அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் தான் மரணம் அடைந்தார் என்று ஆரம்ப கட்ட பரிசோதனையில் தெரிய வந்ததாக கூறினார்.
சுனந்தாவுக்கு ஏற்கனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளது. வயிற்றில் புற்று நோய் தாக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்காக அவர் கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். 20–ந்தேதி (நாளை) அவர் மீண்டும் கேரளாவுக்கு சிகிச்சைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.
உடல் நலக் கோளாறுடன், கணவரின் கள்ளக்காதல் விவகாரமும் சேர்ந்து அவரது மனதை பாதித்து இருக்கலாம். இதனால் அவர் வைத்திருந்த மருந்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சுனந்தா உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனையில் அவர் என்ன வகையான மருந்து மாத்திரைகள் சாப்பிட்டார் என்பது தெரியவரும். பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் 2 நாளில் இந்த வழக்கை விசாரிக்கும் டெல்லி உதவி கலெக்டர் வசம் ஒப்படைக்கப்படும்.
சுனந்தா உடலில் விஷம் இல்லை. அளவுக்கு அதிக மான மருந்துகளும், மதுவும் சேர்ந்து அவரது உயிரை பறித்துள்ளது என்று மேலோட்டமான பிரேத பரிசோதனை தகவல் கூறுகிறது.
ஆரம்பகட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மத்திய மந்திரி சசிதரூரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் ஏற்கனவே ஒருமுறை உதவி கலெக்டரும், போலீசாரும் விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே கடந்த 15–ந்தேதி திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து சுனந்தாவும் சசி தரூரும் டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்ட போது திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி விமான நிலையம் வரை இருவரும் சண்டை போட்டுக் கொண்டே வந்துள்ளனர். இதை அதே விமானத்தில் பயணம் செய்த மத்திய மந்திரி மணிஷ் திவாரியும் மற்ற பயணிகளும் பார்த்து இருக்கிறார்கள்.
அவர்களது சண்டையை மணிஷ் திவாரி கண்டு கொள்ளவில்லை. டெல்லி விமான நிலையத்தில் இறங்கியதும் சுனந்தா கண்ணீருடன் சென்று முகத்தை கழுவி இருக்கிறார்.
அதன்பிறகு சசிதரூர் ஓட்டலுக்கு சென்றார். சுனந்தா வீட்டுக்கு செல்ல மறுத்து அவருடனே ஓட்டலுக்கு சென்றார். ஒரே அறையில் தங்காமல் தனி அறையில் தங்கினார். அப்போது ஓட்டல் அறையிலும் சண்டை நடந்தது. இதை ஓட்டல் ஊழியர்கள் பார்த்து இருக்கிறார்கள்.
இதுபற்றி ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஓட்டல் அறையில் இருவரும் சண்டை போட்டது, விமான நிலைய வரவேற்பறையில் சுனந்தா கண்ணீருடன் முகம் கழுவியது ஆகியவை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் என்பதால் வீடியோ பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்துகிறார்கள்.
இதுபோன்ற காரணங்களை வைத்து பார்க்கும் போது கடந்த சில நாட்களாக சுனந்தா அதிக அளவு மன அழுத்தத்துக்கு ஆளானதால் தற்கொலை முடிவுக்கு வந்து இருக்கலாம் என்று உறுதியாக தெரிகிறது.
மேலும் சசிதரூருக்கும் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெகருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்தே நட்பு இருந்துள்ளதும் தெரிவந்துள்ளது.
மெகருடனான நட்பை துண்டித்து விடும்படி அப்போது இருந்தே சுனந்தா கண்டித்து வந்துள்ளார். அதை அவர் கேட்காததால் இருவருக்கும் மோதல் முற்றியுள்ளது.
சசிதரூர்–மெகர் இடையேயான இ.மெயில் உரையாடல்கள் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியானது. இதனால் அவர்களது விவகாரம் வெளி உலகுக்கு தெரியவந்தது.
மனைவி மரணத்தால் சசிதரூர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரது மந்திரி பதவியை பறிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் தரப்பில் குரல் எழுந்துள்ளது.
தற்போது சசிதரூரிடம் ஆரம்பகட்ட விசாரணை நடத்திய பின்பு, பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு எதிரான பிடி மேலும் இறுகும் என்று தெரிகிறது.
No comments: