விக்ரம் தாதா விமர்சனம்
நடிகர் : நாகசைத்தன்யாநடிகை : அமலாபால்இயக்குனர் : விவேக் கிருஷ்ணாஇசை : பிரேம்ஓளிப்பதிவு : பூபதி
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெஜவாடா படம், தமிழில் விக்ரம் தாதா என்னும் பெயரில் வெளியாகியுள்ளது.
ஊரில் மிகப்பெரிய தாதாவான பிரபு, கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அவரின் வலது கையாக செயல்படுபவர் முகுல் தேவ். பிரபுவின் கட்டளைப்படி இவர்கள் ஒரு ரவுடியை துரத்தி துரத்தி கொலை செய்து விடுகிறார்கள். இதை பிரபுவின் தம்பியான அபிமன்யூ சிங் எதிர்க்கிறார்.
பிரபு தனது சொந்த தம்பியான அபிமன்யூவிடம் எந்த வேலையும் செய்ய சொல்லாமல் முகுல் தேவ்விடம் சொல்வதால் அவர் மீது அபிமன்யூ வெறுப்புடன் இருக்கிறார். தன்னுடைய இடத்தில் முகுல் தேவ் இருப்பதால் அவனை எப்படியாவது ஓரங்கட்ட வேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில் கோட்டா சீனிவாசராவ் மூலம் பிரபுவை அரசியலில் ஈடுபடுத்த அபிமன்யூ முயற்சி செய்கிறார். அரசியல் வேண்டாம் என பிரபு அதை தட்டி கழித்து விடுகிறார். இதனால் அண்ணன் மீது மிகுந்த கோபம் அடைகிறார் அபிமன்யூ.
முகுல் தேவ்-ன் தம்பிகளாக அஜய்யும், நாக சைதன்யாவும் வருகிறார்கள். அதில் அஜய் முகுல்தேவுக்கு உதவியாக அவருடனே வலம் வருகிறார். மற்றொரு தம்பியான நாக சைதன்யா கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், அங்கு படித்து வரும் போலீஸ் கமிஷனரின் மகளான அமலாபாலும் காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் முகுல் தேவ்-ன் முதல் தம்பியான அஜய்க்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வரும் பிரபுவை ஒரு மர்ம கும்பல் வெட்டி கொலை செய்கிறது. தனது அண்ணனை திட்டம் போட்டு கொலை செய்து விட்டார்கள் என முகுல் தேவ் மற்றும் அவர்கள் சகோதரர்கள் மீது ஊர் முழுவதும் அவதூறு செய்திகளை பரப்பி விடுகிறார் அபிமன்யூ.
அபிமன்யூ, கோட்டா சீனிவாசன் மூலம் அரசியலில் சேர முயற்சிக்கிறார். அதை முகுல் தேவ் தடுக்கிறார். இதனால் அவரை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார். ஒரு கட்டத்தில் முகுல் தேவ்வை அபிமன்யூவின் அடியாட்கள் வெட்டி சாய்க்க, அதுவரை அமைதியாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாக சைதன்யா, தன் அண்ணன் சாவுக்கு காரணமானவர்களை பலி வாங்க விஸ்வரூபம் எடுக்கிறார்.
இவர்களுடனான சண்டையின் இறுதியில் யார் வென்றார்கள்? என்பதே மீதிக்கதை.
காளி பிரசாத் என்னும் கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்துகிறார் பிரபு. அவருக்கு ஏற்ற தாதா வேடம் என்றதால் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். முகுல்தேவ், அஜய் ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்துள்ளார்கள். நாக சைதன்யா, முதற்பாதியில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் ஆக்ஷனில் தூள் பறத்துகிறார்.
நாயகியான அமலாபால் நாயகனுடன் இரண்டு பாடல்களுக்கு வந்து நடனமாடி செல்கிறார். நடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. சங்கர் தாதாவாக வரும் அபிமன்யூ வில்லத்தனத்தில் மிரட்டுக்கிறார்.
இயக்குனர் விவேக் கிருஷ்ணா, வழக்கமான பழி வாங்கல் கதையை எடுத்துக் கொண்டு, அதை திரைக்கதை மூலம் மெருகேற்றியிருக்கிறார். சண்டைக்காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் மிகவும் அருமை.
மொத்தத்தில் ‘விக்ரம் தாதா’ வீறு நடை.
No comments: