பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கங்குலி நீதித்துறை தேசிய பல்கலை. கவுரவ பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்தார்
பயிற்சி வழக்கறிஞரை பாலியல் தொந்தரவு செய்ததாக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இருந்து பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கங்குலிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பதவியை ராஜினாமா செய்ய கங்குலி மறுத்துவிட்டார்.
கொல்கத்தாவில் உள்ள நீதித்துறை அறிவியலுக்கான தேசிய பல்கலைக்கழகத்திலும் கவுரவ பேராசிரியராக கங்குலி பணியாற்றி வருகிறார். இந்த பதவியையும் கங்குலி ராஜினாமா செய்ய வேண்டும் என சக பேராசிரியர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
ஜனவரி முதல் வாரம் நடைபெற உள்ள பல்கலைக்கழக நிர்வாகக் குழு கூட்டத்தில் கங்குலியை நீக்குவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நீதித்துறை அறிவியலுக்கான தேசிய பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியர் பதவியை ஏ.கே.கங்குலி இன்று ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
No comments: