தனியார் கல்லூரி மாணவ–மாணவிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய நமீதா
சென்னை மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவுக்கு நடிகை நமீதா அழைக்கப்பட்டு இருந்தார்.
புத்தாடை அணிந்து இவ்விழாவுக்கு அவர் வந்தார். மாணவ–மாணவிகள், பேராசிரியர்கள் வரவேற்றனர். கல்லூரி வளாகத்தில் அடுப்பில் விறகு கட்டைகள் வைத்து தீ மூட்டப்பட்டது. அதில் பொங்கல் பானையை நமீதா வைத்தார்.
பொங்கல் பொங்கி வந்ததும் பொங்கலோ பொங்கல் என்று கோஷம் போட்டார். மாணவ–மாணவிகளும் குரல் எழுப்பினர். பின்னர் அகப்பையால் பொங்கலை கிளறி விட்டார். வெந்ததும் பொங்கல் பானையை கீழே இறக்கி மாணவ–மாணவிகளுக்கு தன் கைப்பட பரிமாறினார். மாணவர்கள் பொங்கலை சாப்பிட்டு சுவையாக இருப்பதாக தெரிவித்தனர். நமீதாவும் பொங்கல் சாப்பிட்டார். பின்னர் கரும்பை துண்டாக வெட்டி சாப்பிட்டார்.
உரியடி நிகழ்ச்சியில் பங்கேற்று கண்களை கட்டி சரியாக உரியை அடித்து மாணவ–மாணவிகள் கைதட்டலையும் பெற்றார். நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் நடந்தன. அதிலும் பங்கேற்று நடனம் ஆடினார். பின்னர் ஏழைகளுக்கு உதவி பொருட்களும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நமீதா பேசும்போது, மாணவ–மாணவிகள் பலர் இக்கல்லூயில் உடல்தானம், ரத்ததானம் செய்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவ–மாணவிகள் சமூக அக்கறையோடு இருப்பது பாராட்டுக்குரியது. இது நல்ல மாற்றம். வரும் காலம் நமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது. படிப்பது என்று மட்டும் இல்லாமல் சமூகம் சார்ந்த சிந்தனையும், மாணவ–மாணவிகளுக்கு இருக்க வேண்டும். ரத்ததானம், உடல்தானம் செய்தவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு நமீதா பேசினார்.
No comments: