Header Ads

ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை: இளைய தளபதி விஜய் பேட்டி

விஜய் நடித்து, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.டி.நேசன் டைரக்டு செய்துள்ள ‘ஜில்லா’ படம், கடந்த 10-ந்தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி விஜய், பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி, டைரக்டர் ஆர்.டி.நேசன், நடிகர்கள் சூரி, மஹத், இசையமைப்பாளர் டி.இமான், வினியோகஸ்தர் சிபு ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது விஜய் கூறியதாவது:-

‘‘இது, வெற்றி விழா கூட்டம் அல்ல. நான் எப்போதுமே வெற்றியை கொண்டாடியதில்லை. ஜில்லா படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு அளித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்தான் இது. என் நண்பர்கள் ஒரு வீடியோ படத்தை என்னிடம் காட்டினார்கள். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலை மூன்று மணிக்கே தியேட்டருக்கு படம் பார்க்க வந்த ரசிகர்களை அந்த வீடியோ படத்தில் பார்த்து நெகிழ்ந்து போனேன்.

கடுமையான பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் தியேட்டர்களில் அவர்கள் தோரணங்களையும், அலங்கார வளைவுகளையும் கட்டியது, என் மனதை தொட்டது. ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘வீரம்’ படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். இது, சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம். அஜீத்துக்கும், அந்த படத்தில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.’’

இவ்வாறு விஜய் பேசினார்.

அவரிடம், ‘‘நீங்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக ஒரு தகவல் பரவி வருகிறதே?’’ என்று கேட்டதற்கு, ‘‘அது வெறும் வதந்தி’’ என்று பதில் அளித்தார்.

No comments:

Powered by Blogger.