கள்ளக்காதல் விவகாரமா?: சசிதரூர் மனைவி சாவில் மர்மம்- டெல்லி போலீஸ் விசாரணை
மத்திய மந்திரிசபையில் மனிதவள மேம்பாட்டு துறை ராஜாங்க மந்திரியாக இருப்பவர் சசிதரூர். 57 வயதாகும் சசிதரூர் 2010–ம் ஆண்டு காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கர் என்ற 52 வயது பெண்ணை திருமணம் செய்தார். இருவருக்கும் இது 3–வது திருமணம். இருவரும் ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்கள்.
இந்த திருமணம் பெரும் சர்ச்சையை கிளம்பியது. சமீபத்தில் சசிதரூக்கு பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர்தரார் என்பவருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா குற்றம் சாட்டினார். கடந்த சில நாட்களாக ‘டுவிட்டர்’ இணைய தளத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்காதல் விவகாரத்தை மறுத்த சசிதரூர் ‘‘நானும் சுனந்தாவும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் டுவிட்டரில் யாரோ போலியாக உருவாக்கிய பேச்சுக்களால் மனவேதனை அடைந்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டார்.
இது போன்ற பிரச்சினைக்கிடையே சசிதரூர் நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார். அவரது மனைவி சுனந்தா டெல்லி லீலாபேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். இரவு 8.30 மணி அளவில் சுனந்தா ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற பின் மாலையில் சசிதரூர் சுனந்தாவுக்கு போன் செய்தார். பதில் இல்லாததால் ஓட்டலுக்கு சென்று பார்த்தார். சுனந்தா தங்கி இருந்த அறை கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஓட்டல் ஊழியர்கள் தங்களிடம் இருந்த கார்டு மூலம் ‘ஸ்விப்’ செய்து அறையை திறந்தனர்.
சுனந்தா படுக்கையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சசிதரூர் தனது உதவியாளர் ஆர்.கே.சர்மா மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் தீபக் மிஸ்ரா தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். சுனந்தா உடலில் காயங்கள் இல்லை. தூங்கிய நிலையில் இருந்தார். சமீபகாலமாக சசிதரூர் கள்ளக்கதல் பற்றி பரபரப்பு தகவல் வெளியானதால் அவர் விரக்தியில் தற்கொலை செய்தாரா? என்று சந்தேகம் ஏற்பட்டது.
போலீஸ் நடத்திய விசாரணையில் சுனந்தாவுக்கு பாரம்பரிய உடல்கூறு நோய் இருப்பதும் இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து வந்ததும் தெரிய வந்தது. அவருக்கு வெள்ளை மஞ்சள் காமாலை நோயும் இருந்தது. இதற்காக அவர் சில நாட்களுக்கு முன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த சமயத்தில் தான் சசிதரூக்கும் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளருக்கும் கள்ளக்காதல் அரும்பியதாக சுனந்தா புகார் கூறினார். ஏற்கனவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சுனந்தா கணவரின் கள்ளக்காதல் விவகாரம் அவரை மேலும் மன அழுத்தத்துக்கு தள்ளியது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல்நிலை பாதிப்பால் இறந்தாரா? என்ற மர்மம் நிலவுகிறது.
சுனந்தா பிற்பகல் 3.30 மணி வரை அறையில் நடமாடி இருக்கிறார். அதன் பிறகு இரவு படுக்கையில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஓட்டல் அறைக்கு வேறு யாரும் வந்து சென்றார்களா? என்பதை அறிய கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ காட்சிகளை போட்டு பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஓட்டல் அறையில் பதிவான ரேகைகளும் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது.
மேலும் சுனந்தா உடல் இரவு 10 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை பிரேத பரிசோதனை அறைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனையும், பல்வேறு ரசாயன பரிசோதனைகளும் நடைபெறுகிறது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. பரிசோதனையின் முடிவில்தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும். அவர் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகளும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் பெண் இறந்தால் அவரது மரணம் பற்றி உதவி கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதன்படி சுனந்தா மரணம் பற்றி டெல்லி உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இரவோடு இரவாக அவர் விசாரணையை தொடங்கினார். அதிகாலையில் சசிதரூரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார். சுனந்தா இறந்து கிடந்த ஓட்டல் அறை சீல் வைக்கப்பட்டது.
சுனந்தா பயன்படுத்திய ஐபோன், ஐ–பாட் போன்றவை கைப்பற்றப்பட்டது. அதில் பதிவான எண்கள், டுவிட்டர் உரையாடல்கள் போன்றவற்றை எடுத்து விசாரிக்கப்படுகிறது. ஓட்டல் ஊழியர்கள், சசி தரூரின் வேலைக்காரர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சசிதரூரின் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணி நடப்பதால் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள். சுனந்தா இறந்த தகவல் அறிந்ததும் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட சசிதரூர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். தாய் நாட்டுக்கு திரும்பி வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியாற்றினார். ஐ.நா. சபையில் இந்திய பிரதிநிதியாக செயல்பட்டார். வேலையை ராஜினாமா செய்து விட்டு 2009–ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
பிரதமர் மன்மோகன்சிங் மந்திரி சபையில் வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரியாக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் அவர் சுனந்தாவை திருமணம் செய்தார். 57 வயதில் 52 வயது பெண்ணை திருமணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொச்சி ஐ.பி.எல். அணியின் பங்குதாரராக செயல்பட்டதாக சசிதரூர் மீது புகார் கூறப்பட்டது. இது போன்ற காரணங்களால் 2010–ல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு 2012–ல் அவர் மீண்டும் மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றார்.
சசிதரூர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியதால் பிரச்சினைக்குரிய மந்திரியாக இருந்தார். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் தேர்தல் பிரசார கூட்டங்களில் சசிதரூரின் நடத்தையை குறை கூறினார். பணத்துக்காக சுனந்தாவை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டினார். பதிலுக்கு சசிதரூரும் நரேந்திர மோடி மீது தனிப்பட்ட முறையில் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே பெரும் கருத்து போர் நடை பெற்றது.
சுனந்தா இறந்ததால் சசிதரூர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். அவருடன் பிரதமர் மன்மோகன்சிங் டெலிபோனில் பேசி ஆறுதல் கூறினார். சுனந்தா இறப்பதற்கு முன் சசிதரூர் கடைசியாக தனது டுவிட்டரில், சுனந்தாவின் உடல்நிலையை கருதி அவரது அருகிலேயே இருக்க விரும்புகிறேன். ஆனால் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் சுனந்தாவுடன் இருக்க முடியவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
No comments: