மீண்டும் கார்த்தி-தமன்னா இணைகிறார்களாம்
சிறுத்தைதான் கார்த்தி நடிப்பில் கடைசியாக ஓடிய படம். அதன்பிறகு அவர் நடித்த சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, என எந்த படமும் ஓடவில்லை. பிரியாணி மட்டும் சற்று தாக்குபிடித்தது.
இந்நிலையில் அடுத்து அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் காளி என்ற படத்தில் நடிக்கிறார் கார்த்தி. ஆனால், புதிய கதைகள் தொடர் தோல்விகளை கொடுத்து வருவதால், ஏற்கனவே தனது நடிப்பில் ஹிட்டான ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டுள்ளதாம்.
அதனால் தனது ஹிட் படங்களான பருத்தி வீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களை பட்டியலிட்ட கார்த்தி, இப்போது சிறுத்தை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.
அப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, இப்போது அஜீத்தின் வீரம் படத்தை இயக்கியிருப்பதால், அடுத்து அவர் தன்னை இயக்கினால் அது மெகா படமாகி விடும் என்று நினைக்கும் கார்த்தி, அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் நடித்து முடித்ததும், சிவா இயக்கத்தில் நடிக்கிறாராம். அந்த படத்திலும் தமன்னாவே கதாநாயகியாக நடிக்கிறாராம்.
காரணம், கார்த்தியுடன் இணைந்து தமன்னா நடித்த பையா, சிறுத்தை என்ற இரண்டு படங்களுமே ஹிட்டாக அமைந்ததோடு, தமன்னாவை தனது செண்டிமென்ட் நாயகியாக சிறுத்தை சிவாவும் நினைப்பதால், அப்படத்தில் அவர் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம்.
No comments: