Header Ads

விமான விபத்தில் 239 பேர் பலி எதிரொலி சீன பயணிகளின் உறவினர்கள் கொந்தளிப்பு மலேசியா கொலைகார அரசு என குற்றச்சாட்டு

பீஜிங்: மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த  8ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளை சேர்ந்த ஏராளமான  போர் விமானங்களும், கப்பல்களும் மாயமான விமானத்தை தேடும் பணியில்  ஈடுபட்டன. 2 வாரத்துக்கும் மேலாக நடந்த தேடுதல் பணியின் போது தினமும்  ஒவ்வொரு தகவல்கள் கூறப்பட்டன. விமானம் கடத்தப்பட்டதாகவும்,  விபத்துக்குள்ளானதாகவும் மலேசிய அரசு மாறி மாறி குழப்பியது. விசாரணை  குறித்த தகவல்களையும் அந்நாட்டு அரசு முழுமையாக வெளியிடவில்லை.  இந்நிலையில், தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில்  இருந்து 2,500 கி.மீ. தொலைவில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடப்பது  கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியாவும் சீனாவும் தெரிவித்தன. 

இவற்றை கைப்பற்ற கப்பல்கள் விரைந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென  பத்திரிகையாளர்கள் சிறப்பு கூட்டத்தை கூட்டிய மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்,  இங்கிலாந்து செயற்கைகோள் நிறுவனம் இன்மர்சாட் அளித்த தகவலின்  அடிப்படையில் மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து  நொறுங்கிவிட்டதாகவும், அதில் பயணம் செய்த விமான ஊழியர்கள் உள்பட  மொத்தம் 239 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் ஆழ்ந்த  வருத்தத்துடன் தெரிவித்தார். இது, உலகம் முழுவதும் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்தவர்களில்  பெரும்பாலானோர் சீனர்கள் தான். 154 சீன பயணிகள் பயணம் செய்துள்ளனர்.  அவர்களின் உறவினர்கள் பீஜிங்கில் மலேசிய தூதரம் அருகே உள்ள ஓட்டலில்  தங்கி தினமும் தகவல்களை கேட்டறிந்து வந்தனர். விமானம் நொறுங்கிய  தகவலை அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் சீன அரசு உடனடியாக தெரிவித்தது.  இதனால் சீன மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

அதே சமயம், விமானம் நொறுங்கியதற்கான காரணம், அதற்கான ஆதாரம் என  எதையும் மலேசிய அரசு வெளிப்படையாக தெரிவிக்காததால் அவர்கள் கடும்  ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று காலை சீன பயணிகளின்  உறவினர்கள், அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பேரணியாக மலேசிய  தூதரகத்தை நோக்கி சென்றனர். அவர்கள் கையில், ‘மலேசியா ஒரு கொலைகார  அரசு‘, ‘மலேசிய அரசு எங்களை ஏமாற்றி விட்டது‘, ‘எங்கள் உறவினர்களின்  உயிரை திருப்பி கொடு‘ என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தி  கோஷமிட்டபடி சென்றனர். மலேசிய தூதரகத்தை சுற்றி பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தூதரகத்தில் நுழைய முயன்றவர்களை போலீசார்  தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.  கற்களையும், காலி பாட்டிகளையும் தூதரகம் மீது வீசி எறிந்தனர். ‘மலேசிய அரசு  தவறான தகவல்களை தந்து விசாரணையை திசை திருப்பியுள்ளது. மனித  உழைப்பும், காலமும் வீணடிக்கப்பட்டுள்ளது.

 இதில் பல நாடுகளின் பணமும் நேரமும் விரயமாக்கப்பட்டுள்ளது. மலேசிய  அரசும், ராணுவமும், ஏர்லைன்சும் எங்கள் மதிப்பு மிகுந்த உறவினர்களின்  வாழ்க்கையோடு விளையாடி அவர்களை கொன்றுவிட்ட கொலைகாரர்கள்,  பொய்யர்கள், அவர்களால் எங்கள் உறவினர்களை திருப்பி தர முடியுமா‘ என  கேட்டு கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக மலேசிய அரசு முடிவுக்கு வந்தது  எப்படி என்பதை விளக்க வேண்டும் என சீன அரசு கேட்டுள்ளது. இது குறித்து,  மலேசிய தூதருடன் பேசிய சீனாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி  ஹாங்ஷெங், ‘மலேசியாவிடம் உள்ள அனைத்து தகவல்களையும்,  ஆதாரங்களையும், செயற்கைகோள் தகவல்களையும் வெளியிட வேண்டும்‘ என  கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சீனாவைத் தொடர்ந்து மற்ற உலக நாடுகளும்  மலேசியாவுக்கு நெருக்கடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திரிகைகளில் கறுப்பு பக்கம்

மலேசியாவின் நியூ ஸ்ரைட் டைம்ஸ் என்ற செய்தித்தாள் முதல் பக்கம்  முழுவதையும் கருப்பு நிறத்தில் அச்சிட்டுள்ளது.மேலும், அப்பக்கத்தில் “குட் நைட்  எம்ஹெச்370“ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. அதுதான் மாயமான  மலேசிய விமானத்தில் இருந்து வந்த கடைசி செய்தி. மலாய் மற்றும் சீன மொழி  பத்திரிக்கைகளும் முதல் பக்கத்தை கருப்பு நிற பின்னணியுடன் வெளியிட்டுள்ளன.
ஆங்கில பத்திரிக்கையான சன் தனது செய்தித்தாளின் பெயரை கருப்பு நிறத்தில்  வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப்,  ‘காணாமல் போன மலேசிய விமானம் குறித்து மலேசிய அதிகாரிகள் அளித்த  அறிக்கைகள் முரண்பாடாக உள்ளது. விமானி குறித்த விசாரணையை திசை  திருப்புகிறது. மலேசிய அதிகாரிகள் மிகக்குறைவான தகவல்கலையே வெளியிட்டு  உள்ளனர். விமானம் குறித்து விசாரணை நடத்தியவர்களிம் எந்த தகவலையும்  அவர்கள் சரிபார்க்கவில்லை‘ என செய்தி வெளியிட்டுள்ளது.

கறுப்பு பெட்டி என்ன ஆச்சு?

கடலில் மூழ்கிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் கறுப்பு பெட்டியை  கண்டுபிடிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த கறுப்பு  பெட்டியின் பேட்டரிகள் 30 அல்லது 40 நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில்  இருக்குமாம். அதற்குள¢ கண்டுபிடிக்காவிட்டால், கறுப்பு பெட்டியை தேடுவது  மிகவும் கடினமாகி விடும் என கூறப்படுகிறது. ஆனாலும் எப்போது  கண்டுபிடித்தாலும் அதில் உள்ள தகவல்கள் அழியாமல் இருக்கும். இதற்கு முன்,  ஏர் பிரான்ஸ் 447 என்ற விமானம் விபத்துக்குள்ளாகி 2 ஆண்டுக்கு பிறகுதான்  அதன் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தகவல்கள் அனைத்தும்  பத்திரமாக இருந்துள்ளன என இங்கிலாந்தின் இன்மர்சாட் செயற்கைகோள்  நிறுவனம் கூறியுள்ளது.

உயிரின் விலை ரூ.3 லட்சமா?

விமான விபத்தில் பலியான பயணிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்  வழங்குவதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தேவைப்பட்டால்  கூடுதல் நிதியையும் தருவதாக கூறியுள்ளனர். இது பயணிகளின் உறவினர்கள்  மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு உயிரின் விலை ரூ.3 லட்சமா  என மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

No comments:

Powered by Blogger.