Header Ads

லிங்குசாமியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் சூர்யாவின் ‘அஞ்சான்’ படப்பிடிப்பு ரத்து

திரைப்பட இயக்குனர் லிங்குசாமிக்கு எதிராக மும்பையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அவர் இயக்கி, சூர்யா நடித்து வரும் ‘அஞ்சான்’ திரைப்படத்தின படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

‘இனம்’ படம்

இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘இனம்’. இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். இந்த படம் இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை சித்தரித்து உருவாக்கப்பட்டு உள்ளது. படத்தில் சில இடங்களில் தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து படத்தின் சர்ச்சைக்குறிய காட்சிகள் நீக்கப்படுவதாக இயக்குனர் லிங்குசாமி அறிவித்து இருந்தார்.

நடிகர் சூர்யா

இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்து லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.  மும்பை வி.டி. பகுதியில் உள்ள பலார்ட் ஸ்டேட் அருகே நடிகர் சூர்யா வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருந்தது.

இதை அறிந்த மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியினர் 50–க்கும் மேற்பட்டோர் மதியம் 3 மணி அளவில் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் திரண்டனர்.

ஆர்ப்பாட்டம்

அப்போது அவர்கள் இயக்குனர் லிங்குசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் இயக்குனர் லிங்குசாமியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘அஞ்சான்’ பட உதவி இயக்குனர்களுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இயக்குனர் லிங்குசாமி படப்பிடிப்பை ரத்து செய்வதாக அறிவித்தார்.

அப்போது நடிகர் சூர்யாவை காண அவரது ரசிகர்களும் அங்கு திரண்டு இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறினார்.

தமிழர்களை இழிவுபடுத்தி...

ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மாநில நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து கட்சியின் மாநில செயலாளர் பொன் கருணாநிதி கூறுகையில், ‘தமிழர்களை இழிவுபடுத்தி படம் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது தற்போது வாடிக்கையாகி விட்டது, அது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்’ என்றார்.

No comments:

Powered by Blogger.