Header Ads

மலேசிய விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் பட்டுவாடா

பீஜிங்: இந்திய பெருங்கடலின் தென் பகுதியில், மலேசிய விமானத்தின்  நொறுங்கிய பாகங்களை தேடும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.  விமானத்தில் சென்ற சீன பயணிகளின் உறவினர்களுக்கு, இழப்பீடு தொகையை  இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. மலேசிய தலைநகர்  கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கடந்த  8ம் தேதி காணாமல் போனது. அதில் விமான பணியாளர்கள் உள்பட 239 பேர்  இருந்தனர். விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி  இருக்கலாம் என்று ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் கூறின.  அதற்கு ஆதாரமாக சாட்டிலைட் படங்களை வெளியிட்டன. அதன் அடிப்படையில்,  ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா உள்பட பல நாட்டு போர் விமானங்கள்,  கப்பல்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டன.

ஆனால், இந்திய பெருங்கடலில் மழை, சூறை காற்று போன்ற மோசமான  வானிலையால் நேற்று தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை  மீண்டும் விமானத்தின் நொறுங்கிய பாகங்களை தேடும் பணி  தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்கா தனது கடல் கடவுள்  என்றழைக்கப்படும் போசிடியன் விமானத்தை அனுப்பி உள்ளது. சீனாவும் தனது  இலுஷின் ஐஎல்-76 என்ற விமானத்தை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து  அனுப்பியது. இந்த விமானங்கள், இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டுள்ளன. 

இதற்கிடையில், மலேசிய அரசு உண்மையை மறைக்கிறது என்று கூறி,  பயணிகளின் உறவினர்கள் பீஜிங் விமானம் நிலையம் மற்றும் பீஜிங்கில் உள்ள  மலேசிய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார்  சமாதானப்படுத்தினர். இந்நிலையில், மலேசிய விமானத்தில் சென்ற 156 சீன  பயணிகளின் உறவினர்களுக்கு இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள்  வழங்கி வருகின்றன. விமானம் என்ன ஆனது, அதில் சென்றவர்கள் என்ன  ஆனார்கள் என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் இன்சூரன்ஸ் பணம்  பட்டுவாடா செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Powered by Blogger.