Header Ads

குவைத்தில் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொலை

கேரளாவை சேர்ந்த பலர் சவுதி அரேபியா, குவைத், பக்ரைன் போன்ற அரபு நாடுகளில் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். கோழிக்கோடு மாவட்டம் காந்தி ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் சாரங்கதன்(வயது 55). 
இதுபோல் மலப்புரம் மாவட்டம் மூர்கந்து ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் நவுசத்(25). 

இவர்கள் இருவரும் குவைத்தில் உள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அந்த நிறுவனம், அங்குள்ள சிறு கடைகளுக்கு காய்கறி, மளிகை பொருட்களை மொத்த விலையில் சப்ளை செய்து வந்தது. அந்த கடைகளுக்கு சென்று பொருட்களுக்கான பணம் வசூலிப்பது சாரங்கதன் மற்றும் நவுசத் ஆகியோரின் வேலையாகும். 

இந்த நிலையில் சம்பவத்தன்று சாரங்கதன் மற்றும் நவுசத் ஆகியோர் அங்குள்ள ஒரு கடையில் பணம் வசூலிக்க காரில் சென்றனர். காரை கடையின் அருகே நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று 11 ஆயிரம் தினார் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம்) வசூல் செய்து விட்டு காருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். 

அப்போது முகமூடி அணிந்த 2 பேர் அவர்களை வழிமறித்தனர். பின்னர் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சாரங்கதன் மற்றும் நவுசத்தை சரமாரியாக சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டுகள் நெஞ்சில் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே சாரங்கதன் மற்றும் நவுசத் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். பின்னர் சாரங்கதன் மற்றும் நவுசத்தின் கையில் இருந்த பணத்தை பறித்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர். 

இதுகுறித்து குவைத் அரசு, கேரளாவில் உள்ள சாரங்கதன், நவுசத் குடும்பத்தினர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தது. இந்த சம்பவம் குறித்து குவைத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.