Header Ads

வங்கக் கடலில் எம்.எச்.370 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு?

மாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் பாகங்களை வங்கக் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக, ஆஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

எம்.எச்.370 தேடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் கவனத்தைப் பெற்றுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற எம்.எச்.370 விமானம், கடந்த மாதம் 8-ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்ற யூகத்தில் இதுவரை தேடல் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக் கடலில் விமானத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்.எச்.370 தேடலில் ஈடுபட்டுள்ள அடிலெய்டில் உள்ள ஜியோரெசோனனஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வுத் தகவலை, ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டேவிட் போபி கூறுகையில், "கடந்த மார்ச் 10-ம் தேதியில் இருந்து விமானத்தை எங்களது நிறுவனம் தனியாக தேடிவந்தது. இதுவரை எந்த உறுதியான தகவலும் இன்றி தேடல் நடைபெற்ற நிலையில், தற்போது இந்தியப் பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் அலுமினியம், டைட்டானியம், இரும்பு போன்ற ரசாயனக் கூறுகள் கொண்ட பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது.

மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று நம்பக்கூடிய பொருட்களாக இவை உள்ளன. செயறகைக்கோள் மற்றும் விமானங்கள் எடுத்த புகைப்படங்களை கொண்டு, விமானம் கடைசியாக பயணித்த இடத்திற்கு வடக்கே 20-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, எங்கள் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

அணு ஆயுதங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் தொழில்நுடபங்களை இந்த பணிக்காக பயன்படுத்தினோம். மலேசிய விமானம் மாயமானதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மார்ச் 5-ம் தேதி நிறுவனம் கடல்பரப்பில் எடுத்த படத்தில், தற்போது கிடைத்துள்ளப் பொருட்கள் எதுவும் காணப்படவில்லை.

எனினும், இது மாயமான விமானத்தின் உடைந்த பாகம் என்று நாங்கள் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த கோணத்திலும் ஆய்வை தொடர வேண்டும் என்று நினைக்கிறோம்" என்றார்.

முன்னதாக, விமானம் மற்றும் அதன் கறுப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்காவின் புளூபின்-21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி ஈடுபடுத்தப்பட்டது. இந்த நீர்மூழ்கி 14 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்தது. எனினும் விமானம் மற்றும் அதன் கறுப்புப் பெட்டி குறித்து எந்த தகவலும் இல்லை. விமானத்தின் தேடல் 53-வது நாளாக தொடர்கிறது.

No comments:

Powered by Blogger.