Header Ads

அஜித் ஒரு குடும்ப போலீஸ்!

நேர்மையான போலீஸ், நேர்மையில்லாத போலீஸ் என்ற வழக்கமான சட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல், தனக்கான காக்கிச் சட்டைக் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் அஜித் கெட்டிகாரர்.. ‘கீரீடம்’ படத்தில் காவல்துறையைக் கௌரவப்படுத்தும் ‘சக்திவேல்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு’ ஏகன்’ படத்தில் சிவா என்ற சிபிஐ அதிகாரியாக நடித்து ரசிகர்களைப் போரடித்தார். ஆனால் கொஞ்சம் எதிர்மறையான குணம் கொண்ட மகாராஷ்டிர போலீஸ் கமிஷனர் விநாயக் மகாதேவனாக ‘மங்காத்தா’ படத்தில் ரசிகர்களுக்குப் புதிய சுவையை ஊட்டினார். அடுத்து வந்த ஆரம்பம் படத்திலோ வெடிகுண்டு மீட்புத் துறையில் நடந்த ஊழலால் சக அதிகாரி நண்பனை இழந்து, அதற்குக் காரணமானவர்களைத் துணிச்சலாகக் குறிவைத்து அழிக்கும் உதவி கமிஷனராகக் கதிகலங்க வைத்தார்.

மொத்தத்தில் அஜித் காக்கிச் சட்டை அணிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பதற்கான அடுத்த அறிகுறியாகியிருக்கிறது கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடிக்க ஆரம்பித்திருக்கும் தலைப்பு சூட்டப்படாத புதிய படம். ‘ஆயிரம் தோட்டாக்கள், ‘துடிக்குது புஜம்’, ‘55’ என்று அஜித் ரசிகர்கள் வழக்கம்போல இணையத்தில் ஏகப்பட்ட தலைப்புகளைச் சூட்டிக் கொண்டாடுகிறார்கள். ஆனால் கௌதமிடம் கேட்டாலோ, “இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை முடித்த பிறகு தலைப்புக்கென்றே ஆற அமர உட்கார்ந்து யோசிக்கப்போகிறோம். நிச்சயமாக நச்சென்று நல்ல தலைப்பு கிடைக்கும். அப்படிக் கிடைக்காமல் போனால் அஜித் கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாக வைத்துவிடுவோம்” என்பவர் அடுத்த கேள்வி கேட்பதற்குள் முந்திக்கொண்டு, “அது இன்னும் அசத்தலாக இருக்கும். ஆனால் அந்தப் பெயரை மட்டும் கேட்காதீர்கள். இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்” என்கிறார்.

இந்தப் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து, ஒரு போலீஸ் அதிகாரிக்கே உரிய ஃபிட்னெஸ்ஸுடன் அஜித் இருக்கிறாரே, இந்த முறை அஜித் எந்த மாநிலத்தின் காவல்துறையில் இருக்கிறார், அவர் உங்களது ‘துப்பறியும் ஆனந்த்’ என்று எடுத்துக்கொள்ளலாமா என்றால், அதற்கும் இப்போதைக்கு வாயைத் திறக்க முடியாது என்கிறார். “ஆனால் இந்த முறை அஜித்தை ஒரு அசத்தலான குடும்பஸ்தராக நீங்கள் பார்க்கலாம். இதில் பாசமான ஒரு குடும்பத்தின் அங்கமாக இருக்கிறார். அஜித் இன்னும் நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தும் இடத்திற்கு அவரை இட்டுச்செல்லும் கதை இது” என்று ஆர்வத்தைக் கூட்டுகிறார்.

தமன்னா என்னதான் முன்னணிக் கதாநாயகியாக இருந்தாலும் ‘வீரம்’ படத்தில் அவர் உப்புக்குச் சப்பாணியாகத்தானே இருந்தார். இந்தப் படத்தில் அனுஷ்காவுக்கும் அப்படியொரு ரோல்தானா என்றால் “அனுஷ்காவை அப்படியெல்லாம் நீங்கள் ஏமாற்ற முடியாது. அதுவுமில்லாமல், முதல் தரமான நடிப்பைத் தரும் கதாநாயகிதான் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியும் என்று முடிவு செய்தபோது அனுஷ்கா பளிச்சென்று முதல் சாய்ஸாக இருந்தார். அஜித் - அனுஷ்கா காம்போ இதற்குமுன் அமைந்திருந்தால்கூட இத்தனை கனமாக அமைந்திருக்க வாய்ப்பே இல்லை” என்கிறார் கௌதம் மேனன்.

இந்தப் படத்தின் அடுத்த கட்ட ஆச்சரியங்கள் என்னவாக இருக்கும் என்று தேடினால் பாலிவுட்டில் தம் மரோ தம், காக்கி போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய ஸ்ரீதர் ராகவன் இந்தத் துப்பறியும் போலீஸ் கதையின் திரைக்கதை மற்றும் வசனத்தைக் கௌதம் மேனனுடன் சேர்ந்து எழுதுகிறார். இவர் சென்னைக்காரர். தமிழ் அறிந்தவர். இந்தியில் வந்த ‘ஏஜென்ட் வினோத்’ உள்படச் சில படங்களையும் இயக்கிவர். போலீஸ் மற்றும் துப்பறியும் ஏஜெண்ட் கதைகளை ட்ரீட் செய்வதில் கில்லாடி.

கௌதம் மேனன் தனது டீமை வலுவானதாக அமைத்துக் கொள்ள ஸ்ரீதர் ராகவனை இணைந்துக் கொண்டதுபோல, டான் மெக்கார்த்தர் என்ற ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளரை கேமராவுக்கு அமர்த்திக்கொண்டிருக்கிறார். இவர் ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் தங்கம் வென்றவர். இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ். இதற்கு மேல் என்ன வேண்டும் என்கிறீர்களா?

No comments:

Powered by Blogger.