இன்டர்நெட்டில் போட்டி போட்டு விஜய், அஜீத்தை விமர்சிக்க வேண்டாம்: டைரக்டர் சேரன் வேண்டுகோள்
விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் பொங்கலுக்கு ரிலீசானது. இப்படங்கள் பற்றி இருவரின் ரசிகர்களும் இன்டர் நெட்டில், பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் மாறி மாறி அவதூறாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது திரையுலகினரை வருத்தமடைய செய்துள்ளது.
அஜீத் ரசிகர்களுடன் மோத வேண்டாம் என்றும் இது ஆரோக்கியமான செயல் அல்ல என்றும் தனது ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கினார். டைரக்டர் சேரனும் இந்த மோதல் போக்கை கைவிடுமாறு இருவரின் ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சேரன் பேஸ் புக்கில் கூறி இருப்பதாவது:–
தலையா? தளபதியா? அஜீத்தா, விஜய்யா பொங்கல் போட்டியில் யாருக்கு வெற்றி ஜில்லாவா? வீரமா? இந்த ஆரோக்கியமான போட்டி சினிமா உலகத்துக்கு சம்பாதித்து தரப்போவது எத்தனையோ கோடிகள். முதல் இடம் இரண்டாம் இடம் தாண்டி இரண்டு பேருமே உருவாக்கி வைத்துள்ள ரசிகர்கள் கூட்டம் இவர்கள் இருவரது படங்களையும் இன்னும் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள் என்ற நிலைமைதான் இவ்வளவு கோடிகளை திரையுலகுக்கு சம்பாதித்து தருகிறது.
ஒருவகையில் இது ஆரோக்கியம்தான். ஆனால் இன்று பேஸ்புக், டுவிட்டர் போன்ற எல்லா நெட் வொர்க்கிலும் ஒவ்வொருவரின் ரசிகர்களும் மாறி மாறி இகழ்ந்து வசைபாடி எழுதுவது வேதனையாக இருக்கிறது. உங்களை போன்ற ரசிகர்களால்தான் அவர்கள் இருவரும் இந்த உயரம் போனார்கள். அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதை எழுதினால் அதற்கு செவிசாய்க்க மாட்டார்களா? உங்கள் தேவை என்ன என்பதை அவர்களிடம் உணர்த்துவதுதான் நாகரீகம், மாறாக கிண்டல் செய்து எழுதுவதை மாற்றி இன்னும் அவர்களை உயரம் கொண்டு போக வித்திடுங்கள். இதனால் உங்களுக்கு நல்ல படங்களும் திரையுலகினருக்கு நிறைய வருமானமும் நல்ல சிந்தனை உள்ள புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பும் கிடைக்கலாம்.
இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.
No comments: