Header Ads

ஜில்லா படத்தை எதிர்த்து வழக்கு: சினிமா தயாரிப்பாளர் மீது தாக்குதல்

விஜய்–மோகன்லால் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘ஜில்லா’ படத்துக்கு தடை கேட்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலையூரை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் மகேந்திரன் என்பவர், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

பிரகாஷ்ராஜ்–ஸ்ரேயா நடித்துள்ள பகீரதா என்ற தெலுங்கு படத்தை தமிழில் ‘ஜில்லா’ என்ற பெயரில் எடுப்பதற்காக இந்த தலைப்பை நான் 2008–ம் ஆண்டில் பதிவு செய்துள்ளேன் என்றும், எனவே, விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜில்லா’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பாக ஜில்லா பட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று இரவு வடபழனி சாலிகிராமம் தனலட்சுமி காலனியில் உள்ள தனது வக்கீல் தாமோதர கிருஷ்ணனை சந்திப்பதற்காக தயாரிப்பாளர் மகேந்திரன் சென்றார். பின்னர் சேலையூரில் உள்ள தனது வீட்டுக்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து டியூப்லைட் மற்றும் உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். இதில் முகம், முதுகு உள்ளிட்ட இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டது. 

வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக வட பழனி போலீசில் மகேந்திரன் புகார் அளித்துள்ளார். அதில், எங்கள் தலைவரின் படத்தையா தடுக்க நினைக்கிறார்? என்று கூறி என்னை தாக்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.