ஆம் ஆத்மி கட்சியில் சேர நடிகர் விஜய்க்கு அழைப்பு
புதுடெல்லி, ஜன. 9–
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஆம் ஆத்மிக் கட்சியை பாராட்டி கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். நடிகை நமீதாவும் பாராட்டினார். அவர் இக்கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வந்தன.
இந்த நிலையில் நடிகர் விஜய்யும் ஆம் ஆத்மி கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாக செய்திகள் பரவி உள்ளன. விஜய் தனிகட்சி துவங்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அதை உறுதிபடுத்தவில்லை.
விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பங்கஜ் குப்தாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–
ஆம் ஆத்மி கட்சியில் தேர்வது குறித்து நடிகர் விஜய்யோ வேறு எந்த திரையுலக நட்சத்திரங்களோ எங்களை அணுகவில்லை. விஜய் எங்கள் கட்சியில் தாராளமாக சேரலாம். வேறு நடிகர்களும் வரலாம். அவர்கள் கட்சியில் சேர எந்த தடையும் இல்லை.
கட்சியில் விஜய் சேர்ந்தாலும் அவர் சாதாரண உறுப்பினராகவே இருக்க முடியும். ஆம் ஆத்மி கட்சியில் பதவிக்கு வர அவர் விரும்பினால் அவரது நேர்மை மற்றும் ஊழலற்ற நடவடிக்கைகள் குறித்து விசாரித்து அதன்பின்னரே பொறுப்பு வழங்கப்படும்.
நன்னடத்தை உள்ளவர்கள், குற்றப்பின்னணி இல்லாதவர்கள்; ஊழல் செய்யாதவர்கள் போன்றோருக்கு மட்டுமே கட்சியில் பதவி வழங்கப்படும். இதை விசாரிப்பதற்கு கட்சியில் தனியாக குழு ஒன்று செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments: