Header Ads

20 ஓவர் உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்கா போராடி தோல்வி

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதின. இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி குசால் பெரேரா- தில்சான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தில்சான் முதல் பந்திலேயே ஸ்டெய்ன் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 

அடுத்து வந்த ஜெயவர்தனே 9 ரன்னிலும், சங்கக்காரா 14 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அப்போது இலங்கை 9.5 ஓவரில் 83 ரன் எடுத்திருந்தது. ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் குசால் பெரேரா அதிரடி காட்டினார். அவர் 40 பந்தில் 3 சிக்கர், 5 பவுண்டரியுடன் 61 ரன் விளாசினார். 

மாத்யூஸ் 43 ரன் எடுக்க, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல் தலா 2 விக்கெட்டும், தஹிர் 3 விக்கெட்டும் எடுத்தனர். 

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டி காக் 25 ரன்னிலும், அம்லா 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் (24), டுமினி (39) ஆகியோரும் சிறிது நேரத்தில் வெளியேறினர். இதனால் தென் ஆப்பிரிக்கா 15.4 ஓவரில் 4 விக்கெட் 119 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்த நெருக்கடியான நேரத்தில் 5வது விக்கெட்டுக்கு மோர்னே மோர்கல், மில்லருடன் ஜோடி சேர்ந்தார். அப்போது தென்ஆப்பரிக்காவுக்கு 26 பந்திற்கு 47 ரன் தேவைப்பட்டது. 

16-வது ஓவரை மெண்டீஸ் வீசினார். அந்த ஓவரில் மோர்னே மோர்கல் இரண்டு இமாலய சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். 

இவரையடுத்து வந்த பெகார்டியன் 5 ரன்களில் பெவிலியன் திரும்ப, ஆட்டம் இலங்கைக்கு சாதகமாக திரும்பியது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், ஸ்டெயின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 2-வது பந்தை தட்டிவிட்டு ஓடிய மில்லர் ரன் அவுட் ஆனார். அவர் 19 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் 2 பந்துகளை வீணடித்துவிட்டு, கடைசி பந்தில் இம்ரான் தகிர் சிக்சர் அடித்தும் பயனில்லை. 

20 ஓவர் முடிவில் தென்ஆப்பரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களே எடுத்தது. இதனால் இலங்கை அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

No comments:

Powered by Blogger.