ஆஸ்திரேலியாவில் ஸ்கைடைவிங் விமான விபத்தில் 5 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வடக்கே 50 கி.மீ தொலைவில் உள்ள காபூல்ச்சர் என்ற பகுதியில் இன்று காலை ஸ்கைடைவிங் செய்யப் பயன்படும் இலகுரக விமானம் ஒன்று கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து தீப்பிடித்தது.
தகவலறிந்தவுடன் மூன்று மீட்புக் குழுக்கள் அந்த விமான தளத்திற்கு அனுப்பப்பட்டதாக குவீன்ஸ்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐந்து அல்லது ஆறு பேரை ஸ்கைடைவிங் பயணத்திற்கு ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் அந்த விமானம் செஸ்னா 206 வகையைச் சேர்ந்தது. விமானத்திலிருந்த உயர் எரிபொருளால் தீப்பற்றிய 10 நிமிடங்களிலேயே விமானம் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று விமானதளப் பணியில் இருந்த பிரையன் கார்பெண்டர் என்பவர் கூறினார். காபூல்ச்சர் பகுதியில் நடைபெற்றுள்ள மிக மோசமான விபத்து இது என்றும் அவர் தெரிவித்தார்.
எரிந்த இந்த விமானத்தில் ஐந்து பேர் பயணம் செய்திருக்கக்கூடும் என்று குறிப்பிட்ட காவல்துறை, இவர்கள் அனைவருமே இறந்திருக்கலாம் என்று தெரிவித்தது.

No comments: