மாயமான விமான பைலட் வீட்டில் 'சிமுலேட்டர்' கருவியில் அழிக்கப்பட்ட தகவல்களை எடுக்க அமெரிக்கா உதவி
கோலாலம்பூர்: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பைலட்டின் வீட்டில் உள்ள கருவியில் சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களை மீட்டெடுக்க அமெரிக்காவின் எப்.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகளின் உதவியுடன் மலேசிய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற விமானம், கடந்த 8ம் தேதி திடீரென மாயமானது. விமானத்தை 26 நாடுகள் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை. விமானம் மாயமான விஷயம் உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திட்டமிட்டு விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது, திசை மாறி பறந்தது, தீவிரவாதிகள் கடத்தி இருப்பார்களா என்றெல்லாம் ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட் ஜகாரியா அகமது ஷா வீட்டில் மலேசிய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, விமானத்தை ஓட்டுவதற்கு பயிற்சி பெற உதவும் சிமுலேட்டர் கருவி அங்கிருந்ததை பார்த்தனர்.
இந்த சிமுலேட்டர் கருவி, கம்ப்யூட்டர், வீடியோ கேம் போன்றது. ஆனால், அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, ஆய்வு கூடத்தில் வைத்து ஒத்திகை நடத்துவது போல் இந்த சிமுலேட்டர் கருவியில் பயிற்சி பெறுவது வழக்கம். அதன்படி பைலட் ஜகாரியா சிமுலேட்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அதனால், விமானத்தின் தகவல் தொடர்புகளை துண்டித்து, திசை திருப்பி கடத்தி செல்வது போன்ற தகவல்களை அதில் பதிவு செய்துள்ளாரா என்று மலேசிய அதிகாரிகள் ஆராய்ந்தனர். அப்படி எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. ஆனால், சில பைல்களை சிமுலேட்டர் கருவியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி அழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களை மீட்டெடுத்தால், மாயமான விமானத்தை பற்றி ஏதாவது தடயம் கிடைக்கலாம் என்று நம்புகின்றனர். இதையடுத்து அமெரிக்காவின் புலனாய்வு ஏஜென்சி எப்.பி.ஐ. நிபுணர்களுடன் இணைந்து மலேசிய அதிகாரிகள், தகவல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று மலேசிய போலீஸ் தலைவர் காலித் அபு தெரிவித்துள்ளார். அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுப்பதற்கு தேவையான எலக்ட்ரானிக் டேட்டாக்களை மலேசியாவுக்கு வழங்கி உள்ளதாக எப்.பி.ஐ.யும் கூறியுள்ளது.

No comments: