ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானை எளிதில் வென்றது இந்தியா
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டம் மிர்பூரில் இன்று நடந்தது. இதில், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் விளையாடின. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், நிதானத்துடன் ஆரம்பித்து தடுமாற்றத்துடன் இன்னிங்சை நிறைவு செய்தது.
துவக்க வீரர் நூர் அலி ஜத்ரான் பொறுமையுடன் விளையாடி 31 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்த பின்னர் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் அந்த அணி 28-வது ஓவரில்தான் 100 ரன்னை தொட்டது. அரை சதம் அடித்த சமியுல்லா ஷென்வாரி, முகமது ஷாஜத் (22) ஆகியோரின் பங்களிப்பால் ஓரளவு ரன் உயர்ந்தது.
ஆனால், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால், 45.2 ஓவர்களில் அந்த அணி 159 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் ரகானே (56), தவான் (60) ஆகியோர் பொறுப்புடன விளையாடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
அதன்பின்னர் வந்த ரோகித் சர்மா (18 நாட் அவுட்), தினேஷ் கார்த்திக் (21 நாட் அவுட்) ஆகியோர் வெற்றியை உறுதி செய்தனர். 106 பந்துகள் மீதமிருந்த நிலையில் 160 ரன்களை எடுத்த இந்தியா, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

No comments: