ஆசிட் பாதிப்பாளர்களுக்காக போராடும் இந்தியாவின் லட்சுமிக்கு சர்வதேச வீரப்பெண் விருது
வாஷிங்டன்: டெல்லியை சேர்ந்த இளம்பெண் லட்சுமி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். இவரது 16 வயதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர். கடந்த 2005ம் ஆண்டு, தனது நண்பனின் 32 வயது அண்ணனின் காதலை ஏற்றுக் கொள்ளாததினால் டெல்லியின் கான்மார்க்கெட் பகுதி பஸ் நிறுத்தத்தில் லட்சுமி மீது ஆசிட் வீசப்பட்டது. இதனால் தனது முகத்தை முழுமையாக இழந்த லட்சுமிக்கு படிப்பும், வாழ்க்கையும் தொலைந்தது. இதன் பிறகு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தன்னை போன்றவர்களுக்கு உதவ விரும்பிய இவர், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், ஆசிட் விற்பனைக்கு எதிராகவும் பல போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி 27,000 பேரிடம் கையெழுத்து பெற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
இதன் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்கவும், வழக்குகள் நேர்மையாக நடக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தரவும் தீவிரமுயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க அரசால், ஆண்டுதோறும் வழங்கப்படும் சர்வதேச வீரப்பெண் விருதுக்கு லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற விழாவில், அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் இந்த விருதை வழங்கினார். ஆப்கனின் நஸ்ரீன் ஓர்யாகில், பிஜியின் ரோசிகா தியோ, மாலியின் பாத்திமா தோரி உள்ளிட்டவர்கள் லட்சுமியுடன் விருது பெற்றனர்.

No comments: