மாயமான மலேசிய விமான கருப்பு பெட்டி தேடுதல் பணியில் 2வது முறையாக கிடைத்த சிக்னல்
மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம் கடந்த 8–ந் தேதி அதிகாலை மாயமானது. இந்த விமானத்தை பல்வேறு நாடுகளின் கப்பல்களும், விமானங்களும் தேடி வரும் நிலையில், விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து மூழ்கியதாக, மலேசிய அரசு அறிவித்தது.
இதனை தொடர்ந்து விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த விமானங்கள் மற்றும் கப்பல்கள் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து நேற்று முதன்முறையாக சிக்னல் கிடைத்துள்ளது என்று சீன கப்பலான ஹைக்சன் 01 கண்டறிந்தது. இந்நிலையில், கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்ததாக கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் இரண்டாவது முறையாக சிக்னல் கிடைத்துள்ளது.
அது மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370ன் கருப்பு பெட்டியில் இருந்து வந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, ஆஸ்திரேலியாவின் முன்னாள் பாதுகாப்பு துறை அதிகாரியும், இணை ஒருங்கிணைப்பு மைய கழகத்தின் தலைவருமான ஹூஸ்டன் இது குறித்து கூறும்போது, தற்பொழுது கிடைத்துள்ள சிக்னல் மிக முக்கியமானது மற்றும் தேடுதல் பணியை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளது என்றார்.
எனினும், எதுவும் உறுதி செய்யப்படும் வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சீன கப்பல் கண்டறிந்த சிக்னலில் இருந்து 300 கடல் மைல்கள் தொலைவில் ஒரு வகை ஒலி எழுந்துள்ளது. இதனை ஆஸ்திரேலிய கப்பலான ஓஷன் ஷீல்டு ஆய்வு செய்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, எந்தவொரு மீட்பு பணியும் மிக சவாலாகவும் மற்றும் கடினமானதாகவும் இருக்க போகிறது என்றும் கூறியுள்ளார். எனினும் அதிகாரிகள், இந்த சிக்னல்கள் மாயமான விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வருவது தானா? என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments: