Header Ads

3 ஆண்டுகளாக காதலித்தவர் வெறுத்ததால் புதிய காதலனுடன் காதலி வந்த கார் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

3 ஆண்டுகளாக தன்னை காதலித்த பெண் திடீரென்று வேறொருவரை காதலித்ததால் மனம் உடைந்த வாலிபர் புதிய காதலனுடன் காதலி வந்த கார் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் கார்கலா அருகே நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
காதல்
உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா கோலகொந்தட்டுபதவு கிராமத்தை சேர்ந்தவர் வித்யானந்தா சொர்ணா. இவருடைய மகன் அபினாஷ் பூஜாரி(வயது 21). இவர் மின் சாதனங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். மேலும் இவர் வாடகைக்கு ஆட்டோவும் ஓட்டி வந்தார்.
அதேபோல் தட்சிண கன்னட மாவட்டம் மங்களூர் அருகே உள்ள கொலச்சி கம்பளா பகுதியை சேர்ந்தவர் சுஷ்மா பிரிசில்லா (வயது 20). இவர் முல்கியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சுஷ்மா பிரிசில்லா கல்லூரிக்கு செல்லும்போது அபினாஷ் பூஜாரியின் ஆட்டோவில் சென்று வந்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
யார் என்று தெரியாது?
இதையடுத்து கடந்த வருடம் கல்லூரி படிப்பை முடித்த சுஷ்மா பிரிசில்லா மங்களூர் மார்கன்ஸ் கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். மேலும் வேலை முடிந்தவுடன் அவர் அந்த நிறுவனத்தின் சார்பில் ஊழியர்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் காரிலேயே வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அந்த கார் டிரைவர் ஹரிசுடன், சுஷ்மா பிரிசில்லாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே காதலாக மாறியது.
இதனால் சுஷ்மா பிரிசில்லா அவருடைய முன்னாள் காதலன் அபினாஷ் பூஜாரியை சந்தித்து பேசுவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 31&ந் தேதி அபினாஷ் பூஜாரி, சுஷ்மா பிரிசில்லாவை பார்ப்பதற்காக அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த சுஷ்மா பிரிசில்லா, அபினாஷ் பூஜாரியை தனக்கு தெரியாது என்றும், அவர் தனக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வருவதாகவும் அந்த நிறுவனத்தின் காவலாளிகளிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த நிறுவனத்தின் காவலாளிகள் அபினாஷ் பூஜாரியை பிடித்து பாண்டேஷ்வர் போலீசில் ஒப்படைத்தனர்.
கார் முன் பாய்ந்தார்
இந்த நிலையில் நேற்று  விசாரணைக்கு பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து அபினாஷ் பூஜாரி வீடு திரும்பினார். கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராய் காதலித்த சுஷ்மா பிரிசில்லா வேறொருவரை காதலித்ததாலும், தன்னை யார் என்று தெரியாது? எனக் கூறியதாலும் அவர் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார்.
மேலும் சுஷ்மா பிரிசில்லா அவரது புதிய காதலன் ஹரிசுடன் காரில் வீடு திரும்பும்போது அந்த கார் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று மாலையில் வேலை முடிந்ததும் சுஷ்மா பிரிசில்லா காதலன் ஹரிசுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த கார் மங்களூர்-உடுப்பி தேசிய நெடுஞ்சாலையில் பாவெஞ்சே பகுதியில் வந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் அபினாஷ் பூஜாரி தனது மோட்டார் சைக்கிளுடன் கார் முன் பாய்ந்தார். இதில் பலத்த காயமடைந்த அபினாஷ் பூஜாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
2 பேரிடம் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த முல்கி போலீசாசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அபினாஷ் பூஜாரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முல்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி அபினாஷ் பூஜாரியின் தந்தை வித்யானந்தா சொர்ணா முல்கி போலீசில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில், அபினாஷ் பூஜாரியின் சாவுக்கு காரணமான சுஷ்மா பிரிசில்லா மற்றும் அவருடைய காதலன் ஹரிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு சுஷ்மா பிரிசில்லா, அவரது காதலன் ஹரிஷ் ஆகியோரிடம் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.