Header Ads

பவர்ஸ்டாராக மாறிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன்-சந்தானம்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஆடியோ விழா நடந்தபோது, தனது சார்பில் இரண்டு லாரிகளில் ஆட்களை கொண்டு வந்து இறக்கினார் பவர்ஸ்டார் சீனிவாசன். அதனால் அந்த விழா நடந்த அரங்கமே நிரம்பி வழிந்தது. விழாவில், பவர்ஸ்டாரைப் பற்றி யாராவது வாய் திறந்தாலே கைதட்டல் அரங்கை அதிர வைத்தது. அந்த அளவுக்கு அரசியல்வாதிகள் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தார் சீனிவாசன்.

அவரையடுத்து, மான்கராத்தே படத்தின் ஆடியோ விழா நடந்தபோது, சிவகார்த்திகேயனும் தனது ரசிகர்கள் என்ற பெயரில் பெரும்படையை அடியாட்கள் ரேஞ்சுக்கு கொண்டு வந்து இறக்கியிருந்தார். இதனால் விழாவுக்கு வந்திருந்த விஐபிக்களெல்லாம் எங்கே அமர்வது என்றே தெரியாமல் அலைமோதிக்கொண்டு திரிந்தார்கள். கூடவே மீடியாவினருக்கும் பெரும் தொல்லை கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து இப்போது சந்தானமும் அந்த வேலையை ஆரம்பித்திருக்கிறார். தான் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ஆடியோ விழாவை சமீபத்தில் சென்னையிலுள்ள தேவி தியேட்டரில் நடத்தியவர், ஒரு பெரும் கும்பலையே கொண்டு வந்து இறக்கி விட்டார். ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் தியேட்டருக்குள் செய்த தள்ளுமுள்ளுவில் சில விஐபிக்களே உள்ளே வர முடியாமல் தடுமாறிப்போய் நின்றனர். சிலர் கீழே தள்ளியும் விடப்பட்டனர்.

இந்த செய்தி கோடம்பாக்கத்தை அச்சுறுத்தியுள்ளது. இதையடுத்து, தற்போது யாராவது நடிகர்கள், தங்கள் படங்களின் ஆடியோ விழாக்களில் கலந்து கொள்ள சினிமா விஐபிக்களை அழைக்க சென்றாலே, ஆளை விடு சாமி என்று பயந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

No comments:

Powered by Blogger.