Header Ads

போராளி போல மறைவாக இருந்தேன் : வடிவேலு பேட்டி

சென்னை: தெனாலிராமன் சிடி வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட வடிவேலு, என்னை வைத்து படம் தயாரிக்க பயந்தார்கள் என பேசினார்.ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம், கணேஷ், சுரேஷ் இணைந்து தயாரிக்கும் படம் ‘தெனாலிராமன்’. யுவராஜ் தயாளன் இயக்குகிறார். மன்னன், தெனாலிராமன் ஆகிய 2 வேடங்களில் வடிவேலு ஹீரோவாக நடிக்கிறார். ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு. இமான் இசை. இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது, வடிவேலு, பேசியதாவது:
கடந்த இரண்டரை ஆண்டுகளாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதுதேவையா உனக்கு என கேட்காதீர்கள். இது நானாக எடுத்த முடிவு இல்லை. காலத்தின் கட்டாயம். இந்த இடைவெளியில், எனக்கு எந்த வேலையும் கிடையாது. மகிழ்ச்சியாக  இருந்தேன். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான்தான் வேண்டாம் என்று, சென்னேன். ‘தெனலிராமன்’ படத்தின் கதையை கேட்டபிறகு, இந்த படத்தில் கட்டாயம் நடிக்க வேண்டும் என எனக்கு தோன்றியது. உடனே நடிக்க ஒப்பு கொண்டேன். 

நான் நடிக்காத காலகட்டத்தில், நிறைய பேர் எனக்கு போன் செய்து, ஏன் நடிக்கவில்லை என கேட்டார்கள். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், நான் ஒரு மெம்பராக இருக்கிறேன். அவர்களது வீட்டு ரேஷன் கார்டில் மட்டும்தான் எனது பெயர் இல்லை. அந்த அளவுக்கு, மக்கள் என்னை நேசிக்கிறார்கள்.என்னை வைத்து படம் தயாரிக்க பலபேர் பயந்தார்கள். அப்போது, தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு மார்க்கெட் போய்விட்டது. ஊரை காலிசெய்து விட்டு போய்விட்டான் என மற்றவர்கள் சொல்லிவிட கூடாது என்றுதான், ‘தெனாலிராமன்’ படத்தில் நடிக்க ஒப்பு கொண்டேன். தெனாலிராமன் கதைகளை நிறைய படித்திருக்கிறேன். அந்த அடிப்படையில், கற்பனையை கலந்து இந்த படத்தின் கதை, உருவாக்கப்பட்டு இருக்கிறது. நான் இந்த படத்தில் நடிக்கும்போது தயாரிப்பாளரிடம், வடிவேலுவை வைத்து ஏன், இன்னும் படம் தயாரிக்கிறீர்கள் என பலரும் கேட்டுள்ளனர். அப்படியும் துணிச்சலாக அவர், என்னை வைத்து படத்தை தயாரித்துள்ளார்.

சினிமாவில் மட்டுமல்ல, அரசியலுக்கு போய் நான் காமெடி தான் செய்துவிட்டு வந்திருக்கிறேன். இப்போதுள்ள அரசியலும் அப்படித்தான். இரண்டரை ஆண்டு இடைவெளிவிட்டு நடித்திருந்தாலும், அற்புதமான படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றிய எல்லோருமே என் ரசிகர்களாக இருந்து கடுமையாக உழைத்தார்கள். நீங்கள் நடிப்பதால்தான், எங்களுக்கு வேலை கிடைக்கிறது என்று பல துணை நடிகர்கள் கூறினார்கள். என் படத்தின் மூலம் பலபேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதை நினைக் கையில் எனக்கு சந்தோஷ மாக இருக்கிறது.
எனக்கு ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடித்துள்ளார். அவர் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப்பில் பார்த்ததுதான். இப்போது இந்த மேடையில் தான் என் நிஜமான உருவத்தை பார்த்துள்ளார். என்னுடன் ஜோடி சேர்ந்து நடிக்க பல ஹீரோயின்களிடம் பேசினார்கள். ஆனால் சிலர், வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தால், எந்த ஹீரோவும் உங்களை ஒப்பந்தம் செய்யமாட்டார்கள் என கூறி, என்னுடன் நடிப்பதை தடுத்தார்கள். அதையும் மீறி மீனாட்சி தீக்ஷித் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்போது பாருங்கள், தக்காளி பக்கத்தில், தார் ஊற்றிய மாதிரி நான் இருக்கிறேன். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, போட்டிருந்த செட்டுகளை பிரித்தாலே, யூனிட்டே பிரிந்து விட்டதாக வதந்தியை பரப்பினார்கள். அதையும் தாண்டி, படம் உருவாகியிருக்கிறது. மறுமடியும் என் வண்டி, ஸ்டார்ட் ஆகிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

இந்த படத்தில் வேங்கை நாடு மன்னனாகவும், தெனாலிராமனாகவும் 2 வேடங்களில் நடித்துள்ளேன். நான் கிருஷ்ணதேவராயர் வேடத்தில் நடிக்கவில்லை. அப்படி சொல்வது தவறு. தொடர்ந்து நான், காமெடி வேடங்களிலும் நடிப்பேன். ஹீரோவாகவும் நடிப்பேன். நான் ஹீரோவாக நடித்தாலும், மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பேன். இந்த படத்தில் நான் பேசிய வசனம், ‘ஒருவன் லட்சியம் நிறைவேறும் வரை, மறைவாக இருப்பதுதான் நல்லது. இது, உலகின் அனைத்து போராளிகளுக்கும் பொருந்தும்‘ என பேசியிருப்பேன். இந்த வசனம் நிஜ வாழ்க்கையில் எனக்கும் பொருந்தும். நான் நன்றாக ஓடிய குதிரை. கொஞ்சம் ஒதுங்கி கொள்ளும், புல்லும் சாப்பிட்டு இருக்கிறேன். நான் தொடர்ந்து நடிக்க ரசிகர்கள் தான், தைரியம் தரவேண்டும்.

இப்போது, வரும் காமெடியை நான் பார்ப்பது இல்லை. ஏதோ ஒருசில காமெடி காட்சிகளை பார்த்து இருக்கிறேன். ஆனால், யாரையும், குறை சொல்ல முடியாது. அண்ணன் கவுண்டமணி, மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் நல்ல நடிகர். ‘தெனாலிராமன்‘ நடித்து முடித்த பிறகு, நான் இரண்டரை ஆண்டு சினிமாவில் இடைவெளி விட்டதே தெரியவில்லை. மக்களுக்கு தேவை நல்ல நகைச்சுவை. எல்லோரும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Powered by Blogger.