Header Ads

திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியின் மகள் கழுத்தை நெரித்து கொலை தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

திருமணத்திற்கு தடையாக இருந்த கள்ளக்காதலியின் மகளை கொலை செய்து, தற்கொலைக்கு முயன்ற கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.

கள்ளக்காதல்

பெங்களூர் பேட்ராயனபுரா பந்தரபாளையாவில் வசித்து வருபவர் நாகராஜ் நிங்கப்பா. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய சொந்த ஊர் பெல்லாரி மாவட்டம் ஹாகரி அருகே உள்ள பொம்மனஹள்ளி ஆகும். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுமித்ரா. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 2005–ம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவருடன் வாழ பிடிக்காமல் சுமித்ரா பிரிந்து விட்டார்.

அதன்பிறகு, பெங்களூருக்கு வேலை தேடி சுமித்ரா வந்தார். அப்போது நாகராஜுக்கும், சுமித்ராவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது சுமித்ராவுக்கு ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை வாங்கி தருவதாக நாகராஜ் கூறினார். அதன்பிறகு, 2 பேரும் நெருக்கமாக பழகினார்கள். அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மேலும் நாகராஜும், சுமித்ராவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் நிச்சயம்

அதன்மூலம் சுமித்ராவுக்கு 7 ஆண்டுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தீபிகா என்று பெயர் வைத்தனர். ஆனால் நாகராஜும், சுமித்ராவும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன், மனைவி போல வசித்து வந்தனர். இந்த நிலையில், அவர்களுடைய பழக்கம் நாகராஜின் வீட்டிற்கு தெரியவந்தது. உடனடியாக நாகராஜுக்கும், பெல்லாரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த மாதம் (மார்ச்) பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மேலும் சுமித்ராவுடன் உள்ள தொடர்பை கைவிடும்படி நாகராஜின் பெற்றோர் கூறினார்கள். இதையடுத்து, சுமித்ராவுடன் இருந்த தொடர்பை நாகராஜ் மெல்ல மெல்ல தவிர்த்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் 2 பேரும் வாக்குவாதம் உண்டானது. உடனே குழந்தை தீபிகாவை தூக்கி கொண்டு நாகராஜ் வெளியே சென்றார். அதன்பிறகு, அவர் குழந்தையுடன் சுமித்ராவை பார்க்க வரவில்லை.

மகள் கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த சுமித்ரா, கடந்த 9–ந் தேதி பேட்ராயனபுரா போலீசில் இது தொடர்பாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 12–ந் தேதி பெல்லாரி மாவட்டம் ஹாகரி பொம்மனஹள்ளி மெயின் ரோட்டில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சிறுமி பந்தரபாளையாவை சேர்ந்த சுமித்ராவின் மகள் தீபிகா என்பது தெரியவந்தது. பின்னர் ஹாகரி பொம்மனஹள்ளி போலீசார் சுமித்ராவிடம் விசாரித்தார்கள். விசாரணையில், சுமித்ராவிற்கும், நாகராஜுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு, குழந்தையை அவர் தூக்கி சென்றது உள்ளிட்ட அனைத்து தகவலும் தெரியவந்தது.

தந்தை கைது

இதற்கிடையே, பெல்லாரியில் உள்ள தன் வீட்டில் நாகராஜ் திடீரென்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரது குடும்பத்தினர் நாகராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நாகராஜின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் தனியார் ஆஸ்பத்திரிக்கு ஹாகரி பொம்மனஹள்ளி போலீசார் சென்றார்கள்.

பெற்ற மகளை கொன்றதாகவும், தற்கொலைக்கு முயன்றதாகவும் நாகராஜை போலீசார் கைது செய்தார்கள். விசாரணைக்கு பின்பு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெல்லாரி சிறையில் போலீசார் அடைத்தனர்.

No comments:

Powered by Blogger.