காதலித்து ஏமாற்றியதாக போலீஸ்காரர் மீது காதலி புகார்
சென்னை: திருமணம் செய்வதாக கூறி காதலித்து திருமணம் செய்ய மறுப்பதாக போலீஸ் துறையில் பணியாற்றும் காதலன் மீது கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.அயனாவரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் கேஸ் மெக்கானிக். இவரது மகள் பூர்ணிமா (எ) லிடியா ஜபா(22). இவர் நேற்று கமிஷனர் அலுவலகம் வந்து புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரை விசாரித்த அதிகாரிகள், கிழக்கு மண்டல இணை கமிஷனரை சந்திக்கும்படி அனுப்பி வைத்தனர். பின்னர் வெளியே வந்த பூர்ணிமா கூறியதாவது:
நானும் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் போலீஸ்காரர் ஸ்ரீகாந்த் (26) என்பவரும் பள்ளியில் ஒன்றாக படித்தோம். பல ஆண்டுகளாக நண்பராக பழகி வந்த ஸ்ரீகாந்த், பின்னர் காவல்துறையில் சிறப்பு காவல் படையில் சேர்ந்தார். தற்போது சென்னையில் உள்ள துணை கமிஷனர் ஒருவரிடம் ஆர்டர்லியாக உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென ஸ்ரீகாந்த் என்னை காதலிப்பதாக கூறினார். நானும் சிலமாதம் கழித்து அதை ஏற்றுகொண்டேன்.
ஸ்ரீகாந்தின் தந்தை காவலராக இருக்கிறார். ஸ்ரீகாந்தின் தம்பி ஸ்ரீநாத்தும் காவலராக இருக்கிறார். என் பெற்றோரும் எங்களது காதலை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஸ்ரீகாந்தின் பெற்றோர் எதிர்த்ததால் நாங்கள் இருவரும் நண்பர்கள் துணையுடன் பாரிமுனையில் உள்ள பதிவு அலுவலகத்தில் காதலர் தினமான பிப் 14 அன்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து ஏற்பாடு செய்திருந்தோம்.
இதை அறிந்த ஸ்ரீகாந்தின் பெற்றோர் அவரை வீட்டில் அடைத்து வைத்தனர் , இதனால் ஸ்ரீகாந்த் விஷம் குடித்தார். பின்னர் அவரை காப்பாற்றினார்கள். அதன் பின்னர் ஸ்ரீகாந்த் போன் நம்பரை மாற்றி விட்டார். என்னுடன் தொடர்பிலும் இல்லை. இதன் பிறகு நான் அயனாவரம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்தை என்னுடன் சேர்த்து வைக்கும்படி புகார் அளிக்க சென்றேன், ஆனால் போலீசார் மீதே போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்றதால் நான் புகார் அளிக்கவில்லை.பின்னர் என்னை மணக்க முடியாது என்று ஸ்ரீகாந்த் மறுத்து விட்டார். என்னை காதலித்து ஏமாற்றிய ஸ்ரீகாந்த் என்னுடன் இணைந்து வாழ வேண்டும் அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பூர்ணிமா கூறினார்.

No comments: