Header Ads

நத்தம் அருகே கள்ளக்காதலியுடன் தொழிலாளி தற்கொலை

நத்தம் அருகே கள்ளக்காதலியுடன் கூலித்தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கூலித்தொழிலாளி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை திருகளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னன். இவருடைய மகன் வீரமலை என்ற குமார் (வயது 38), விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய முதல் மனைவி காவேரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து வீரமலை, வையம்பட்டி அருகே உள்ள முத்துகோம்பைபட்டியைச் சேர்ந்த நந்தினி (22) என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நந்தினியும் கணவரை பிரிந்து சென்று விட்டார்.
தற்கொலை
இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த வீரமலை சிறுமலை பகுதியில் விவசாய வேலைக்கு சென்றார். அங்கு பெரியமலையூர் பகுதியைச் சேர்ந்த சின்னம்மாள் (45) என்பவரும் வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவருடன் வீரமலைக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சின்னம்மாளுக்கு திருமணம் ஆகி 2 மகன்களும், ஒரு மகளும், பேரன், பேத்திகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடைய பழக்கம் மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானமாக பேசுவார்கள் என்று சின்னம்மாளும், வீரமலையும் கருதி உள்ளனர்.
இதை அடுத்து நேற்று  இரவு வீரமலை தன்னுடைய வீட்டிற்கு சின்னம்மாளை அழைத்துள்ளார். அங்கு இருவரும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்து பூச்சி மருந்தை குடித்து விட்டனர். இதில் மயக்கம் அடைந்த அவர்கள் இருவரும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தனர்.
பிரேத பரிசோதனை
இதனிடையே வீரமலையின் வீட்டுக்கதவு இன்று காலையில் நீண்ட நேரமாகியும் திறக்காததால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்பிரபுவிற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் நத்தம் போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் கூறினார். அதன்பேரில் வீரமலையின் வீட்டுக்கு நத்தம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பாஸ்டின் தினகரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது வீரமலை, சின்னம்மாள் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூலித்தொழிலாளி ஒருவர் கள்ளக்காதலியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நத்தம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Powered by Blogger.