டைரக்டர் ரவிக்குமார், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்’’ நடிகை சுஜி பாலா பேட்டி
எனக்கும், டைரக்டர் ரவிக்குமாருக்கும் திருமணம் நடக்கவில்லை. அவர், எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்’’ என்று நடிகை சுஜி பாலா கூறினார்.
சுஜி பாலா
‘அய்யா வழி, சந்திரமுகி’ கலவரம், முத்துக்கு முத்தாக’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சுஜி பாலா. சில வருடங்களுக்கு முன்பு இவர், பி.ரவிக்குமார் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்த ‘உண்மை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் பாதி வளர்ந்த நிலையில், சுஜி பாலாவுக்கும், ரவிக்குமாருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில், சுஜி பாலா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
பிரிக்க சதி நடக்கிறது
அதைத்தொடர்ந்து, ‘‘சுஜி பாலாவும், நானும் பிரிந்து விட்டோம்’’ என்று ரவிக்குமார் அறிக்கை விடுத்தார்.
சில தினங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், ‘‘எனக்கும், சுஜி பாலாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுஜி பாலாவுக்காக ரூ.86 லட்சம் மதிப்புள்ள பங்களாவும், 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டமும், ஒரு சொகுசு காரும் வாங்கி கொடுத்திருக்கிறேன். என் மனைவி சுஜி பாலாவை என்னிடமிருந்து பிரிக்க சதி நடக்கிறது’’ என்று கூறியிருந்தார்.
சுஜி பாலா பேட்டி
இதுதொடர்பாக, சுஜி பாலா சென்னையில் மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘‘எனக்கும், ரவிக்குமாருக்கும் திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடந்ததாக அவர் பொய் சொல்லுகிறார். எனக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்கிறார். சமீபத்தில் நான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள நடனப்பள்ளியில் இருந்தபோது, ரவிக்குமார் அங்கு வந்து என்னை கைநீட்டி அடித்தார். இதுதொடர்பாக நான் நடிகர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறேன். வடபழனி போலீஸ் நிலையத்திலும் அவர்மீது புகார் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன்.
கொலைமிரட்டல்
ரவிக்குமார், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். என் செல்போன் பேச்சை ஒட்டுகேட்கிறார். அவர், எனக்கு ரூ.86 லட்சம் மதிப்புள்ள பங்களா, 12 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டம் மற்றும் சொகுசு கார் வாங்கிக்கொடுத்ததாக கூறுகிறார். அவ்வளவு வசதியுள்ளவராக அவர் இருந்தால், ‘உண்மை’ படத்தை ‘ரிலீஸ்’ செய்ய வேண்டியது தானே. அவர் எடுத்த படத்தின் பெயர்தான் ‘உண்மை’. ஆனால், அவர் சொல்வதெல்லாம் ‘பொய்’. படத்தில், எனக்கும், அவருக்கும் திருமணம் நடந்தது போன்ற போட்டோவை வைத்துக்கொண்டு, உண்மையில் திருமணம் நடந்ததாக என்னை மிரட்டுகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
நான் மீண்டும் படங்களில் நடிப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான், டெலிவிஷன் நிகழ்ச்சி நடத்துவதும் அவருக்கு பிடிக்கவில்லை. என்னை சினிமாவில் இருந்தும், டெலிவிஷனில் இருந்தும் ஒழித்துக்கட்டுவதற்கு முயற்சி செய்கிறார்.
இவ்வாறு சுஜி பாலா கூறினார்.

No comments: