Header Ads

யாருக்கு எத்தனை தொகுதிகள்? தமிழக கட்சிகள் போடும் கணிப்பு

ஓட்டு எண்ணிக்கைக்கு, இன்னும் இருபது நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள, தமிழக கட்சிகள், தங்களுக்குள் ஒரு கணக்கு போட்டு, வெற்றிப் புள்ளிகளை கணித்து வைத்துள்ளன.

பிரசாரத்திற்கு சென்ற தொகுதிகளில் கிடைத்த வரவேற்பு, கட்சியினரின் கடின உழைப்பு, கூட்டணியின் பலம், மக்கள் பிரச்னைகள் ஆகியவற்றை அலசிப் பார்த்து, இந்தந்த தொகுதிகள், தங்களுக்கு சாதகம் என, இக்கட்சிகள் ஒவ்வொன்றும் கூறுகின்றன.

அ.தி.மு.க., எதிர்பார்ப்பு:


அந்த வரிசையில், ஆளுங்கட்சி, அதிக வெற்றியை எதிர்பார்க்கிறது. மூன்றாண்டு ஆட்சியில் கொடுத்த இலவசங்கள், கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான், நாற்பதிலும் வெற்றி என்ற இலக்குடன், இக்கட்சி களம் புகுந்தது.ஆனால், திடீர் திருப்பமாக, களத்தில், பலமுனைப் போட்டி உருவானதால், அந்த நம்பிக்கையை, எப்போதோ இக்கட்சி இழந்து விட்டது. ஆனாலும், மற்ற அணிகளை விட, அதிக தொகுதிகளை பிடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன், முழு வீச்சில் தேர்தல் பணியாற்றி உள்ளது. இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளிலும், இக்கட்சிக்கே முதலிடம் தரப்பட்டு உள்ளது. 'டிவி' நிறுவனங்களின் கணிப்புகளிலும், புலனாய்வு பத்திரிகைகள் வெளியிட்ட கணிப்புகளிலும், இக்கட்சிக்கே, கூடுதல் இடங்கள் தரப்பட்டு உள்ளன. ஆனால், ஆளுங்கட்சியினரோ, எப்படியும், 30 தொகுதிகளை பிடித்து விடுவோம் என, திட்டவட்டமாக பேசி வந்தனர். 28 முதல் 30 தொகுதிகள் என்பது, இக்கட்சியினரின் கணிப்பு. அதிலும், நேற்று ஒரே நாளில், அதிரடியாக நடந்த பணப் பட்டுவாடா இந்த முடிவுகளை அடியோடு மாற்றி விடும் என்ற எதிர்பார்ப்பும், பேச்சும் இப்போது எழுந்திருக்கிறது.

அலையை நம்பும் பா.ஜ.,:


மோடி அலையை நம்பி, தமிழகத்தில், ஏழு கட்சிகள் இணைந்து, தேசிய ஜனநாயக கூட்டணியை கட்டமைத்து உள்ளனர். இதற்கு தலைமை ஏற்றுள்ள, பா.ஜ., எட்டு தொகுதிகளில் போட்டியிட தயாரானது. வேட்பாளர் செய்த குளறுபடியால், நீலகிரி தொகுதியை பறி கொடுத்தது. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த, புதிய நீதிக் கட்சிக்கு, கடைசி நேரத்தில் வேலூர் தொகுதியை விட்டுக் கொடுத்தது. ஆக, இப்போது, ஆறு தொகுதிகளில், தன் சொந்தக் கட்சியினரை, பா.ஜ., களம் இறக்கி உள்ளது.இவர்களில், மாநில தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும், கன்னியாகுமரியை, வெற்றிப் பட்டியலில், இக்கட்சி எப்போதோ சேர்த்து விட்டது. அதோடு, கோவை, வேலூர், பொள்ளாச்சி, தென் சென்னையையும் சேர்த்து கணக்கு போடுகிறது. பா.ஜ.,வின் வெற்றி பட்டியலில், இந்த, ஐந்து தொகுதிகளும் இடம் பிடித்திருக்கிறது.அதன் கூட்டணியில், 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க.,வுக்கு, திருப்பூர் தொகுதி, நம்பிக்கை அளிக்கும் தொகுதியாக உள்ளதாக, கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால், சேலம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூரையும் சேர்த்து, 'ஐந்து தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' என, தே.மு.தி.க.,வினர் ஆரூடம் சொல்கின்றனர்.தே.ஜ., கூட்டணியில், பா.ம.க., எட்டு தொகுதிகளில், வேட்பாளர்களை நிறுத்தியது. அக்கட்சியின், அடுத்த வாரிசாக கருதப்படுகிற, அன்புமணி, தர்மபுரியில் நிற்கிறார். அவரது வெற்றி, ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட ஒன்று என, எல்லா கருத்துக் கணிப்புகளுமே குறிப்பிட்டு உள்ளன.அதோடு, ஆரணி, அரக்கோணத்திலும் வெற்றிக் கனியை பறித்து விடுவோம் என, பா.ம.க.,வினர் நம்புகின்றனர்.இன்னொரு கட்சியான, ம.தி.மு.க.,வும், இந்த தேர்தலில் எட்டு இடங்களில் போட்டியிட்டு உள்ளது. அக்கட்சித் தலைவர் வைகோ போட்டியிடும் விருதுநகர், ஈரோடு, தூத்துக்குடியை பெரிதும் நம்புவதாக, ம.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

35ல் தி.மு.க., போட்டி:


இதற்கிடையில், தலித் மற்றும் முஸ்லிம் இயக்கங்களின் ஆதரவுடன், 35 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடுகிறது. இக்கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து, கருத்துக் கணிப்புகளில் மாறுபட்ட முடிவுகளே தெரிவிக்கப்பட்டு உள்ளன.முதலில், ஒற்றை இலக்கத்தில் இருந்த, இக்கட்சியின் வெற்றி வாய்ப்பு, இப்போது, இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதாக, அந்த கணிப்புகள் கூறுகின்றன. 'எப்படிப் பார்த்தாலும், எட்டு உறுதி; 12 தொகுதிகளை பிடித்தால் ஆச்சரியமில்லை' என்று அடித்துச் சொல்கிறது, அறிவாலய வட்டாரம்.

இதற்கிடையில், தமிழகம், புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும், காங்., கட்சிக்கும் கூட, வெற்றி விஷயத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. புதுச்சேரியில் இக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன; அதே நேரத்தில், தமிழகத்தில், தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரியிலும், நாங்கள் கரை சேரும் வாய்ப்பு இருக்கிறது' என்கின்றனர், காங்கிரசார்.

No comments:

Powered by Blogger.