Header Ads

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து சீனாவும் தகவல் தெற்கு இந்திய பெருங்கடலில் விமான பாகம்: போர் கப்பல்கள் விரைந்தன

கோலாலம்பூர்: தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில், மலேசிய  விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று கிடப்பது செயற்கைகோள்  புகைப்படத்தில் தெரிவதாக ஆஸ்திரேலியாவைப் போலவே சீனாவும்  கூறியிருக்கிறது. உடனடியாக அப்பகுதிக்கு சீன போர்க்கப்பல்கள்  விரைந்துள்ளன. மலேசியாவின் கோலாம்பூரில் இருந்து சீன தலைநகர்  பீஜிங்குக்கு கடந்த 8ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ்  விமானம் நடுவானில் மாயமானது. 3 வாரங்களாகியும் விமானத்தை  கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் பயணம் செய்த 239 பேரின் கதி  என்னவானது என்பதும் தெரியவில்லை. இந்தியா உள்ளிட்ட 26  நாடுகள் மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.  விமானம் பற்றி ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வந்த  வண்ணம் உள்ளன.

முதலில், தெற்கு சீன கடல் பகுதியில் மர்மபொருள் ஒன்று  மிதப்பதாகவும், இது விமானத்தின் உடைந்த பாகமாக இருக்கலாம்  எனவும் செயற்கைகோள் மூலமாக சீனா கண்டுபிடித்தது. ஆனாலும்,  அந்த மர்மபொருளை தெற்கு சீன கடல் பகுதியில் கண்டுபிடிக்க  முடியவில்லை. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில்  இருந்து தென்மேற்கு பகுதியில் 2,500 கி.மீ. தொலைவில் தெற்கு  இந்திய பெருங்கடல் பகுதியில் 2 மர்மபொருள் மிதந்து  கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம்,  செயற்கைகோள் புகைப்படம் மூலமாக கண்டுபிடித்தது. இதில் ஒரு  பொருள் 24 மீட்டர் அளவுக்கு நீளமானதாக இருந்தது. இதனை  கண்டுபிடிக்க 6 போர் விமானங்களை ஆஸ்திரேலியா அனுப்பியது.  மூன்று நாட்களாக ஆஸ்திரேலிய விமானங்கள் தேடியும்,  மர்மபொருளை கண்டுபிடிக்க முடியாததால் நேற்று முன்தினம் 2  விமானங்கள் திரும்பி வந்தன. செயற்கைகோள் புகைப்படம் எடுத்து 5  நாட்களுக்கு மேல் ஆனதால், அந்த பொருள் கடலில்  மூழ்கியிருக்கலாம் அல்லது காற்றின் வேகத்தில் வேறு இடத்திற்கு  இடம்பெயர்ந்திருக்கலாம் எனவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியா கூறிய இடத்திலிருந்து 120 கி.மீ.  தொலைவில் ஒரு மர்மபொருள் மிதப்பது சீன செயற்கைகோள்  படம்பிடித்திருப்பதாக சீனா தற்போது தெரிவித்துள்ளது. இது குறித்து  சீன ராணுவம் கூறுகையில், ‘ஏற்கனவே ஆஸ்திரேலியா கூறிய  இடத்திலிருந்து 120 கிமீ தென்மேற்கு பகுதியில் மர்மபொருள்  மிதக்கிறது. இது 22.5 மீ நீளமும், 13 மீ அகலமும் கொண்டதாக  உள்ளது. இது, மார்ச் 18ம் தேதி அதிகாலையில் செயற்கைகோள்  புகைப்படத்தில் பதிவாகியிருக்கிறது’ என கூறியிருக்கிறது.  இதைத்தொடர்ந்து, உடனடியாக அந்த மர்மபொருளை கண்டுபிடிக்க  சீன கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. முன்னதாக,  மாயமான மலேசிய விமானம் இந்தியா, கம்போடியா, கஜகஸ்தான்  வான் பகுதியில் பறந்ததாக எந்த தகவலும் ரேடாரில் பதிவாகவில்லை  என்பதை 3 நாடுகளும் உறுதி செய்துள்ளன. இதனால், விமானம்  கடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவிழந்து, விமானம்  விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து  வருகிறது.

கடலுக்கடியில் தேட அமெரிக்கா உதவி

மாயமான விமானத்தை கடலுக்கடியில் தேடுவதற்கான உதவியை  செய்யுமாறு மலேசியா, அமெரிக்காவிடம் கேட்டிருந்தது. இதற்கு  அமெரிக்க அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது குறித்து, பென்டகன்  செயலாளர் ஜான் கெர்பி நேற்று அளித்த பேட்டியில், ‘கடலுக்கடியில்  தேடுவதற்கான நவீன தொழில்நுட்ப கருவியை விரைவில்  வழங்குவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் சோக் ஹகல், மலேசிய  பாதுகாப்பு அமைச்சர் ஹிசாமுதீன் ஹூசேனிடம் தொலைபேசி  மூலமாக உறுதி அளித்துள்ளார்’ என்றார்.

 கடலுக்கடியில் கண்காணிப்பதற்கான தொழில்நுட்பங்களுக்காக  அமெரிக்க அரசு பல கோடி டாலர்களை செலவழித்து வருகிறது.  இதனால், எந்த மாதிரியான கருவி வழங்கப்போகிறது என்பதை  அவர்கள் தெரிவிக்கவில்லை. மேலும், மலேசிய விமானத்தை  கண்டுபிடிக்கும் பணிக்காக இதுவரை அமெரிக்கா ரூ.15 கோடி வரை  செலவு செய்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.