ராணுவத்தில் பெண் பயிலுனர்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் வீடியோ காட்சிகள் உண்மை தான் : இலங்கை ராணுவம் ஒப்புதல்...
கொழும்பு: இலங்கை ராணுவத்தில் பயிற்சி பெற்ற பெண் பயிலுனர்கள் துன்புறுத்தப்பட்டது உண்மைதான் என்று அந்நாட்டு ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற சில பெண்களை கேலி, கிண்டல் செய்து துன்புறுத்தியதாக இணையதளங்களில் வெளியான வீடியோ பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல இது போலியான வீடியோ என்று இலங்கை அரசு வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த காட்சிகள் உண்மையானது தான் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுராதபுரத்தில் பெண் ராணுவ அணி ஒன்றிற்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி விதிமுறைகளை மீறி பயிற்சியாளர்கள் இதுபோன்று நடந்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியா தெரிவித்துள்ளார். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள அவர், தற்போது வெளியாகியுள்ள காட்சிகளில் இருப்பது தமிழ் பெண்கள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மனித உரிமை ஆர்வலர்களை அச்சுறுத்தும் இலங்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜென்சகி, மனித உரிமை ஆர்வலர்கள் பெர்னான்டோ மற்றும் பிரவீன் மகேசன் மீதான இலங்கை அரசிக் கைது நடவடிக்கை கவலை அளிப்பதாக கூறினார். இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் உலக நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
.jpg)
No comments: