மீண்டும் ரசிகர் மன்றத்துக்கு அனுமதி! : அஜித் போட்ட ‘அல்ட்ரா’ கண்டிஷன்கள்!!
தனது லட்சக்கணக்கான ரசிகர்களை எப்போதுமே தனது சுயநலத்துக்காக பயன்படுத்தக் கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருப்பவர் நடிகர் அஜித். அதனால் தான் அரசியல் ஆசை இல்லாத போதும் கூட அவரை அரசியலுக்குள் இழுத்து விடுவது போல் ரசிகர் மன்றம் மூலம் ரசிகர்கள் செய்த சில வேண்டாத செயல்களை வன்மையாகக் கண்டித்தார்.
தனது உத்தரவை மீறியும் ஒரு சில மன்ற நிர்வாகிகள் அரசியல் கட்சியைப் போல தனியாக பொதுக்கூட்டம் போட்டதை எச்சரித்தார். பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் தனது பிறந்தநாளில் ரசிகர் மன்றங்களை கலைக்கப் போவதாகவும், இனி எந்த வகையிலும் ரசிகர் மன்றம் செயல்படாது என்றும் அறிவித்தார். இதனால் கடந்த தேர்தலின் போது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது அவர்களை வைத்து பல லட்சம் ஓட்டுகளை அள்ளத் துடித்த அரசியல் கட்சியினர் கூட அதிர்ந்து போனார்கள்.
இப்படி ஒரே இரவில் தனது ரசிகர் மன்றத்துக்கு மூடுவிழாவை நடத்திய அஜித் மீது எந்த ரசிகரும் கோபம் கொள்ளவில்லை. மாறாக இன்றுவரை அவருடைய ஒவ்வொரு படமும் ரிலீசாகும் போதும் பேனர் அடிப்பது, பால் அபிஷேகம் நடத்துவது, போஸ்டர்கள் ஒட்டுவது என தியேட்டரை திருவிழா போல களைகட்ட வைத்து வருகிறார்கள். அவரது படங்களும் கூட முன்பை விட வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இதனால் தற்போது அஜித் மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டுள்ளதாம், அதாவது ரசிகர் மன்றத்தை கலைத்தும் கூட என்னை விட்டு ரசிகர்கள் விலகியதாகத் தெரியவில்லை, என் மேல் இவ்வளவு அன்பும், உயிரும் வைத்திருக்கும் அவர்களுக்காக மீண்டும் ரசிகர் மன்றத்தை நடத்தலாமா..? என்று தனது சகாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம் அஜித்.
ஆனால் மன்றத்தை மறுபடியும் ஆரம்பித்தால் அதை எப்படி நடத்த வேண்டும், மன்றத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று அஜித் பல அல்ட்ரா கண்டிஷன்களையும் போட்டிருக்கிறாராம்.
அதாவது மீண்டும் ரசிகர் மன்றத்தை திறந்தால் அதில் உறுப்பினர்களாக உள்ள ரசிகர்கள் நற்பணியை மட்டுமே செய்ய வேண்டும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் மன்றம் சார்பிலோ தனிப்பட்ட முறையிலோ ஆதரவு அளிக்கக் கூடாது, அதேபோல எந்த ஒரு அரசியல் கட்சியுடன் ரசிகர் மன்றக்கொடியையும் சேர்ந்து பறக்க விடக் கூடாது என்பது உள்ளிட்ட பல கண்டிஷன்களை போட்டிருக்கிறார் அஜித்.
அஜித் செய்வது சரியா? தவறா? என்பது ஒருபக்கம் இருந்தாலும் அதில் சுயநலம் மட்டும் துளியும் இல்லை என்பது உண்மைதானே..?

No comments: