Header Ads

கார் மோதி சிறுமி பலி: டி.வி. நடிகர் ஷ்யாம் கைது

நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி என்.எஸ்.பி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவி வளர்மதி (வயது 55). நேற்று வளர்மதி தனது மகள் மல்லிகா (35) மற்றும் பேத்தி மதுமிதா(7) ஆகியோருடன் சீர்காழியில் இருந்து எருக்கூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோவை தென்பாதியை சேர்ந்த சண்முகம் (39) என்பவர் ஓட்டி சென்றார்.

பாதரக்குடி பைபாஸ் சாலையில் ஆட்டோ சென்றபோது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் சிறுமி மதுமிதா உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் மூலம் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிறுமி மதுமிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வளர்மதியும், மல்லிகாவும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆட்டோ மீது மோதிய கார் நிற்காமல் வைத்தீஸ்வரன் கோவில் நோக்கி சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் சீர்காழி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சீர்காழி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் போலீசார் காரை பிடிக்க சென்றனர். இதனை அடுத்து விபத்துகுள்ளான கார் செங்கமேடு பைபாஸ் சாலையில் டீசல் இல்லாமல் பாதியிலேயே நின்றுவிட்டது. உடனே போலீசார் காரையும், அதில் இருந்த ஒருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் காரில் இருந்தவர் சென்னை அண்ணாநகர் டி.வி.எஸ். காலனியை சேர்ந்த டி.வி. நடிகர் சீனு என்கிற ஷ்யாம் என்பதும் தெரியவந்தது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஷ்யாமை போலீசார் கைது செய்தனர். 

No comments:

Powered by Blogger.