Header Ads

மதுபான பார், போதை மையத்தில் போலீசார் சோதனை 39 பேர் கைது; 9 அழகிகள் மீட்பு

மும்பையில் மதுபான பார் மற்றும் போதை மையத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 39 பேரை கைது செய்தனர். மேலும் 9 அழகிகளை மீட்டனர்.

ஆபாச நடனம்

மும்பை தகிசர் சி.எஸ். ரோடு பகுதியில் உள்ள மதுபான பாரில் ஆபாச நடனம் நடைபெறுவதாக சமூக குற்றத்தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த பாருக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். நள்ளிரவு நேரம் நெருங்குவதையொட்டி அங்கு அழகிகளின் ஆபாச நடனம் அரங்கேறுவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த மதுபான பார் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட 18 பேரை கைது செய்தனர்.

மேலும் ஆபாச நடனம் ஆடிய 9 அழகிகளை மீட்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகிசர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைதானவர்களிடம் இருந்து ரூ.79 ஆயிரத்து 590 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போதை மையம்

இதே போல மாகிம் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள முதல் மாடியில் ‘ஹூக்கா’ போதை மையம் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று இரவு மாறு வேடத்தில் சென்று சோதனை போட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ‘ஹூக்கா’ போதை மையம் செயல்படுவது உறுதியானது.

இது தொடர்பாக போலீசார் அங்கிருந்த 21 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 550 பறிமுதல் செய்தனர். இது குறித்து மாகிம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.