சென்னையை சேர்ந்த 3 கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் கடலில் மூழ்கி பலி கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது பரிதாபம்
கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் சென்னையை சேர்ந்த 3 கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள்
சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 5 கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். சனி, ஞாயிறு, திங்கள் (தமிழ்ப்புத்தாண்டு) ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறையாக வருவதால் அவர்கள் இன்ப சுற்றுலா புறப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை கோவா சென்றடைந்த அவர்கள் அங்குள்ள மோர்ஜிம் கடற்கரையில் மாலை 6.50 மணி அளவில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், கைகளை அசைத்து அபய குரல் எழுப்பினார்கள். உடனே மீட்பு படையினர் விரைந்து சென்று அவர்களில் 3 பேரை மீட்டனர். 2 பேரை காணவில்லை.
3 பேர் பலி
மீட்கப்பட்ட 3 பேரையும் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் காணாமல்போன 2 பேரின் உடல்களும் கடலில் மிதந்தன. இறந்த 3 பேரும் சி.கே.கோபாலகிருஷ்ணன் (வயது24), நவின் பல்லா (24), ஷ்ரவண் ரெட்டி (29) என்பது தெரியவந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் 2 பேரில் கவுதம் குமார் என்பவர் கூறும்போது, ‘‘நாங்கள் 5 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். சென்னையில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நாங்கள் பணிபுரிந்து வந்தோம். விடுமுறையில் சுற்றுலாவாக வந்த இடத்தில் விபத்தில் சிக்கிக் கொண்டோம்’’ என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: