பெண் பத்திரிகையாளர் பலாத்காரம் : 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
மும்பை: சக்தி மில் வளாகத்தில் பெண் புகைப்பட பத்திரிகையாளர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதித்து முதன்மை செஷன்ஸ் கோர்ட் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. 4வது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மும்பை, மகாலட்சுமி பகுதியில் பாழடைந்த நிலையில் கிடக்கும் சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி 22 வயது பெண் புகைப்பட பத்திரிகையா ளர் ஒருவர் 5 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விஜய் ஜாதவ் (19), காசிம் பெங்காலி (21), சலீம் அன்சாரி (28), சிராஜ் கான் மற்றும் ஒரு மைனர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த முதன்மை செசன்ஸ் கோர்ட் நீதிபதி ஷாலினி ஜோஷி, இந்த வழக்கில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி மற்றும் சலீம் அன்சாரி ஆகிய மூவரும் இந்திய தண்டனை சட்டத்தின் திருத்தப்பட்ட பிரிவான 376(இ) பிரிவின் கீழ் குற்றவாளிகள் என நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். ஏற்கனவே இதே குற்றத்தை புரிந்துள்ளவர்களுக்கு மரண தண்டனை விதிக்க இந்த சட்டப்பிரிவு வகை செய்கிறது. கடந்த 2012ல் டெல்லியில் மருத்துவமாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த புதிய சட்டப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளி களாக அறிவிக்கப்பட்ட மேற்கண்ட மூன்று பேரும் இதே சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி டெலிபோன் ஆபரேட்டர் ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கிலும் சம்பந்தப்பட்டு அந்த வழக்கில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி மற்றும் சலீம் அன்சாரி ஆகிய மூவருக்கும் 376(இ) பிரிவின் கீழ் மரண தண்டனை விதித்து நீதிபதி ஷாலினி நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் நான்காவது குற்றவாளி சிராஜ் கானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டில் இப்போதுதான் முதன் முறையாக இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்படுகிறது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகமின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஷாலினி, “இதுபோன்ற மனப்பாங்கை நசுக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய அரசு விரும்புகிறதுÓ என்றார். புதிய சட்டப்பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற எதிர்தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை நீதிபதி நிராகரித்து விட்டார்.
“குற்றவாளிகள் 3 பேரும் ஏற்கனவே தண்டிக்கப்பட்டதை தீர்ப்பு நகல் மூலமாக அரசு தரப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது. குற்றவாளிகளின் அடையாளமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய தண்டனை பதிவு செய்யப்பட்ட பிறகுதான் புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடியும்Ó என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: