Header Ads

பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொன்ற மாமியார் கைது

போடியில், மகனை காதலித்து திருமணம் செய்த ஆத்திரத்தில் மருமகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெண் மர்ம சாவு

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 56). இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 25). இவர் திருச்சியில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை பார்த்தபோது, அவருடன் வேலை செய்த புதுக்கோட்டை மாவட்டம் பொக்கிசகாரன்பட்டியை சேர்ந்த பூபதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் போடி தங்கமுத்தம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர்.

சம்பவத்தன்று சதீஷ்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். பூபதி வீட்டில் இருந்தார். இந்த நிலையில் டீ குடிப்பதற்காக பூபதியை அழைக்க சதீஷ்குமாரின் தாயார் சுலோச்சனா (48) சென்றபோது, அங்கு பூபதி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் இரு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்தது.

மருமகளை கொன்ற மாமியார் கைது

இந்த நிலையில் விசாரணையில் பூபதியை அவருடைய மாமியார் சுலோச்சனாவே கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது சுலோச்சனா, தனது மருமகளை விஷம் கொடுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

மகனை பூபதி காதல் திருமணம் செய்தது பிடிக்காமல் அவருக்கு விஷம் கொடுத்து கொன்றதாக சுலோச்சனா போலீசாரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.