Header Ads

வெற்றியுடன் துவக்குமா சென்னை: இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்////

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் இரு முறை கோப்பை வென்ற சென்னை அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் இன்று மாலை நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை அணியை பொறுத்தவரையில் 2010, 2011 என, இரு முறை கோப்பை வென்றுள்ளது. தவிர, 2008, 2012, 2013ல் பைனலுக்கு முன்னேறியது.
தற்போது அணியின் கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட சிலரது பெயர்கள் சூதாட்ட அறிக்கையில் இடம் பெற்றது, அணி உரிமையாளர் சிக்கியது என, பல்வேறு தொல்லைகளில் உள்ளது.
இருப்பினும், அணியை எப்படியும் அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்வது தான் முதல் வேலை என்று முடிவு செய்துள்ளார் தோனி. இதனால், அணியின் வெற்றியில் கூடுதல் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.
தவிர, இம்முறை வழக்கமான துவக்க வீரர்கள் முரளி விஜய், மைக் ஹசி அணி மாறிவிட்டனர். இதனால், புதிய வரவுகளான பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித் துவக்கம் தர காத்திருக்கின்றனர். மற்றபடி, 'மிடில் ஆர்டரில்' ரெய்னா, பாபா அபராஜித் கைகொடுக்க வேண்டும்.
'சுழல்' கூட்டணி: 'ஆல்-ரவுண்டர்' இடத்தில் டுவைன் பிராவோ இடம் பெறலாம். தவிர, சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா கூட்டணியுடன், இம்முறை 'டுவென்டி-20' தரவரிசையின் 'நம்பர்-1' பவுலர் சாமுவேல் பத்ரீயும் களம் காணலாம்.
இதனால், டுபிளசிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் மோகித் சர்மா, ஈஷ்வர் பாண்டே அல்லது ஆஷிஸ் நெஹ்ரா என, இரு இந்திய வீரர்கள் சேர்க்கப்படத் தான் அதிக வாய்ப்புள்ளது.
ஜான்சன் பலம்: கடந்த 2008ல் நடந்த முதல் தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற பஞ்சாப் அணி, இதன் பின் ஒருமுறை கூட லீக் சுற்றினை தாண்டியது இல்லை. ஒவ்வொரு முறையும் பெரும் எதிர்பார்ப்புடன் வரும் இந்த அணி, இம்முறையும் அதிக வலுவான அணியாகத் தான் உள்ளது.
கேப்டன் ஜார்ஜ் பெய்லி தலைமையில், அதிரடி துவக்க வீரர் சேவக், ஷான் மார்ஷ், புஜாரா, மன்தீப் சிங் உள்ளனர். பின் வரிசையில் போட்டியை 'பினிஷிங்' செய்ய, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், திசரா பெரேரா காத்திருக்கின்றனர்.
பவுலிங்கில் ரூ. 6.5 கோடிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், அவானா, தமிழகத்தின் பாலாஜி நம்பிக்கை தருவர். சுழலில் முரளி கார்த்திக்கை மட்டும் தான் நம்ப வேண்டும்.
அபுதாபியில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
100 வது போட்டி
ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்றது, அதிக வெற்றிகள் பெற்ற அணி வரிசையில் முதலிடம் சென்னைக்குத் தான். இதுவரை 99 போட்டிகளில் பங்கேற்று, 59ல் வென்றது. 38ல் தோல்வி, ஒரு போட்டி 'டை' ஆனது. ஒரு போட்டி கைவிடப்பட்டது.
* இன்று சென்னை அணி தனது 100 வது போட்டியில் களம் காணுகிறது. அடுத்த இடத்தில் மும்பை அணி (96 போட்டி 56 வெற்றி, 40 தோல்வி) உள்ளது.
ரெய்னா 'சதம்'
சென்னை அணி பங்கேற்ற 99 போட்டியிலும் பங்கேற்று அசத்தியுள்ளார் ரெய்னா. இதில் 95 முறை களமிறங்கிய இவர், ஒரு சதம் (100*), 18 அரைசதம் உட்பட மொத்தம் 2,802 ரன்கள் எடுத்து, ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
இன்று 100வது போட்டியில் களம் காணும் இவர், அணியின் வெற்றிக்கு கைகொடுப்பார் என நம்பலாம். அடுத்த இரு இடங்களில் ரோகித் சர்மா (98 போட்டி, 2,540 ரன்கள்), தோனி (96 போட்டி, 2,243 ரன்கள்) உள்ளனர்.

No comments:

Powered by Blogger.