விஜயிடம் மோடி கொடுத்த உறுதிமொழி
திராவிட கட்சிகள், அரசியலுக்காகவும், தங்கள் தோற்றத்தின் இயல்பினாலும், திரையுலகத்தினரிடம் நெருங்கிய உறவு கொண்டாடினாலும், தமிழக பா.ஜ., இதுவரை அவ்வாறு செய்தது இல்லை. ஆனால், அப்படி செய்தால் தான், தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டதோ என்னவோ, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் மோடி, கடந்த ஒரு வாரத்தில், இரண்டு நடிகர்களை சந்தித்துவிட்டார். கடந்த 13ம் தேதி, அவர், ரஜினியை சந்தித்த போது, ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரிக்கத்தான் வந்தார் என்றும், தேனீர் அருந்த வந்தார் என்றும் ரஜினி தரப்பில் கூறப்பட்டது. யார் நம்புவார்கள்?
அடுத்தபடியாக, நேற்று முன்தினம், மோடி, கோவையில் பிரசாரத்திற்கு வந்த போது, நடிகர் விஜய், அவரை சந்தித்தார். இதுகுறித்து, எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றாலும், விஜயின் அரசியல் ஆர்வமும், அதனால், அவர் பட்ட பாடும் அனைவருக்கும் தெரிந்ததே. நிச்சயம் அவர், தனது படத்தின் வினியோக உரிமைகள் பற்றி பேச மோடியை சந்திக்கவில்லை. பின்பு எதற்கு சந்தித்தார்?
இதுகுறித்து, சினிமா வட்டாரங்கள் கூறிய தாவது: சினிமாவில் ஓரளவுக்கு வளர்ந்தது முதல், தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது, நடிகர் விஜயின் கனவு. அதற்காக தான், ரசிகர் மன்றத்தை வேகமாக துவக்கி, அதை வலுப்படுத்த ஆரம்பித்தார் விஜய். மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயங்கிய ரசிகர் மன்றத்தை, அவரை விட அவருடைய அப்பா இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஆர்வத்துடன் நடத்தினார். அவர், தன்னுடைய மகனை வைத்து, இரட்டை கணக்குகள் போட்டார். இப்படி, விஜய் ரசிகர் மன்றத்தை பலப்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் தன்னுடைய மகன் நடிக்கும் படம், ரசிகர் பலத்தால் நன்றாக ஓட வைக்க முடியும் என்பது ஒருபக்கம், அந்த ரசிகர் மன்றத்தை வைத்து, பிற்காலத்தில் தன் மகனை, தமிழகத்தின் முதல்வராக்குவது இன்னொரு பக்கம் என, ஒரே குதிரையில் இரட்டை சவாரி செய்ய நினைத்தார். இதை நோக்கியே அவர்களின் மொத்த செயல்பாடுகளும் இருக்க, முதல் முறையாக, கடந்த தி.மு.க., ஆட்சியில் 'காவலன்' படத்தை வெளியிடுவதில் சிக்கல் துவங்கியது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியான, 'மன்மதன் அம்பு' படத்தை, தமிழகத்தின் பிரதான தியேட்டர்களில் வெளியிட, திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது. அதனால், விஜய் படத்துக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை. தன்னுடைய நண்பன் என்ற வகையில், நடிகர் விஜய், தியேட்டர் கிடைக்காத விவகாரத்தை உதயநிதி ஸ்டாலினிடம் கொண்டு போனார். ஆனால், தன்னால் இந்த விஷயத்தில் உதவ முடியாது என, உதயநிதி சொல்லிவிட்டார். இதனால், தி.மு.க., தரப்பு மீது, விஜய்க்கும், அவருடைய அப்பாவுக்கும் கோபம் வந்தது. தொடர்ந்து தி.மு.க.,வை வெறுப்பேற்றும் காரியங்களில் இருவரும் இறங்கினர். இடையில், டில்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்தார், விஜய். ஆனால், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என, சொல்லிவிட்டனர். அதனால், எந்த பரபரப்பும் இல்லாமல் போனது. இருந்தாலும், 2011 சட்டசபை தேர்தலில், விஜயும், அவருடைய அப்பாவும் அ.திமு.க., வுக்கு ஆதரவு தெரிவித்தனர். மக்கள் இயக்கத்துக்கு, தமிழகத்தில் பத்து தொகுதிகளை கேட்டனர். ஆனால், ஜெயலலிதா அதை ஏற்கவில்லை. இருந்தாலும், தன்னிச்சையாக, தமிழகத்தில் சில நகரங்களில் மக்கள் இயக்கத்தின் சார்பில் கூட்டம் போட்டு, அ.தி.மு.க., வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் விஜய். எதிர்பார்த்தபடியே, அ.தி.மு.க., தரப்பு அமோக வெற்றிடைந்துவிட, இந்த வெற்றி விஜயால் தான் கிடைத்தது என்பது போல, போஸ்டர் அடித்து ஒட்டினர், ரசிகர் மன்றத்தினர். இதனால், அ.தி.மு.க., தலைவர் ஜெயலலிதாவுக்கு, விஜய் மற்றும் அவரது அப்பா மீது கடும் கோபம் ஏற்பட்டது.
இந்த நிலையில், விஜய் நடித்த, 'தலைவா' படம் ரிலீஸ் தொடர்பான விளம்பரத்தில் 'தலைவராவதற்கு, ஏற்ற தருணம் இது' என்ற பொருளில் ஆங்கில வாசகம் இடம் பெற்றது. கூடவே, படத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக, 'பஞ்ச்' வசனங்கள் நிறைய உள்ளதாகவும் செய்தி பரவியது. இதனால், படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. படம் ரிலீசானால், தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என, யாரோ எழுதிய மொட்டை கடிதத்தை வைத்து, அரசு தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய மாட்டோம் என சொல்ல, சிக்கலில் ஆழ்ந்தார் விஜய். ஆரம்பத்தில் வீரமாக வசனம் பேசியவர், ஒரு கட்டத்தில், கோடநாட்டில் தங்கியிருந்த ஜெயலலிதாவை சந்தித்து, பட ரிலீஸ் தொடர்பாக கேட்கப் போனார். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை. நீண்ட இழுபறிக்கு பின், படம் ரிலீசாகி, தோல்வியை தழுவியது. அதன் பிறகு, அரசியல் ரீதியாக அமைதியான விஜயின் அடுத்த படமான 'ஜில்லா'வும் தோல்வியடைந்தது. இப்போது, 'கத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
முந்தைய படங்களின் தொடர் தோல்விகளால், அந்த படத்துக்கு ஒரு முக்கியத்துவம் தேவைப்படுகிறது. அதனால், ரஜினி எப்படி 'கோச்சடையான்' விளம்பரத்திற்காக, மோடி சந்திப்பை நிகழ்த்தினாரோ, அதே நோக்கத்தோடு, விஜயும், மோடியை கோவையில் சந்தித்தார். மோடி எப்படியும் பிரதமராகி விடும்பட்சத்தில், இங்கு அதிகாரத்தில் இருப்பவர்களால், பெரிய அளவில் பிரச்னைகளும் இருக்காது என, சொல்லி, விஜயகாந்த் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, தேர்தல் நெருக்கடி நேரத்தில், விஜய் ஆதரவு கொடுத்து இருப்பது, அவருடைய ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்து இருக்கிறது. இந்த முடிவை, விஜய், கொஞ்ச நாட்களுக்கு முன் எடுத்துஇருந்தால், ரசிகர்கள் பா.ஜ., கூட்டணிக்காக தமிழகத்தில் தேர்தல் பணியாற்றி இருப்பார்கள். வரும் 2016 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, விஜய், இப்போதே ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். அவர் லோக்சபா தேர்தலுக்குப் பின், நல்ல சூழல் இருந்தால், பா.ஜ.,வில் இணைந்து விடுவார் அல்லது மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தி, பா.ஜ.,வோடு கூட்டணி அமைத்து, போட்டி இடுவார் அல்லது, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்துக் கொள்வார். இப்படி பல்வேறு விதமான திட்டங்களோடுதான், விஜய், நரேந்திர மோடியை சந்தித்து இருக்கிறார். அதேமாதிரியே, நடிகர் விஜயகாந்துக்கும், விஜய் குறித்து நிறைய எதிர்பார்ப்புகளும், யோசனைகளும் உண்டு. இவ்வாறு, சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
மோடி - விஜய் சந்திப்பு குறித்து, பா.ஜ., தரப்பில் கூறியதாவது: இந்த சந்திப்பு இயற்கையானது; எதிர்பார்ப்பு இல்லாதது என்றெல்லாம் சொல்ல முடியாது. எந்த எதிர்பார்ப்பு இருந்தாலும், அதனால், இரண்டு தரப்புக்கும் லாபம் உண்டு. அதனால், இந்த சந்திப்பை நாங்கள் வரவேற்போம். தேர்தலுக்கு பின், முழு வேகத்தில் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக, விஜய், பா.ஜ.,வின் முழு ஆதரவுடன் களம் புகுவார். 'உங்கள் எதிர்கால கனவுகளுக்கு ஆதரவாக இருப்பேன்' என, விஜயிடம் மோடி சொன்னதன் அர்த்தம் என்ன என்பதை, தேர்தல் முடிவுகளுக்கு பின் நடக்கப் போகும் அரசியல் நிகழ்வுகள் உணர்த்தும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments: