Header Ads

மான் கராத்தே படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்

மான் கராத்தே படம் தொடர்பாக, நடிகர் சிவகார்த்திகேயன் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மான் கராத்தே படம்

சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில், மாநில அளவிலான போட்டிகளிலும் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் பல பரிசுகளை பெற்றுள்ளேன். தற்போது குத்துச்சண்டை பயிற்சி குழு நடத்தி வருகிறேன்.

சமீபத்தில் திரைக்கு வந்துள்ள மான் கராத்தே படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் குத்துச்சண்டையை இழிவுபடுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை. உரிய அனுமதியும் பெற வில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல்.

நடிகர் மீது நடவடிக்கை

எனவே மான் கராத்தே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மான் கராத்தே படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.