Header Ads

பெங்களூருக்கு வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு

கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 166 பயணிகளுடன் பெங்களூருக்கு வந்த எம்.எச்.192 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் கோலாலம்பூருக்கு திரும்பியது. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10 மணிக்கு 159 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகள் உள்பட 166 பேருடன் பெங்களூருக்கு கிளம்பியது. நள்ளிரவு 11.35 மணியளவில் விமானத்தின் வலது பக்க கியர்கள் வேலை செய்யவில்லை. உஷாரான விமானி, விமானத்தை மீண்டும் கோலாலம்பூருக்கு திருப்பினார். அங்கு விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்தார். உடனடியாக கோலாலம்பூர் விமான நிலைய ஓடு பாதையில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகள், மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டனர். பின்னர், அந்த விமானம் அதிகாலை 2 மணியளவில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 

விமானியின் சாதுர்யத்தால் 166 பேரும் உயிர் தப்பினர். கடந்த மாதம் 8ம் தேதி சீன தலைநகர் பீஜிங்குக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சந்தேகத்துக்கு இடமான நிலையில் காணாமல் போனது. இன்று வரை விமானம் என்னவானது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இந்திய பெருங்கடலில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.